தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர் பழனிசாமி இறுதி முடிவெடுப்பார் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார். 

நாடு முழுவதும் கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும்  கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், கொரோனா ஊரடங்கால், பள்ளி, கல்லூரில் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு தன்மையை பொறுத்து மாநில அரசாங்கம் பள்ளிகள் திறப்பது குறித்து முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இதனிடையே, தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிக்கல்வித்துறை செயலாளர், ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தியதாக கூறப்பட்டது. 

இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- பள்ளிகள் திறப்பு குறித்து நேற்று ஆலோசனை எதுவும் நடத்தப்படவில்லை. பள்ளிகள் திறப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. கொரோனாவை குறைந்த பின்பு நல்வாழ்வுத்துறை உள்ளிட்ட துறைகளுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும். தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர் பழனிசாமி இறுதி முடிவெடுப்பார். ஆசிரியர் தகுதித்தேர்வில் தற்போதைய நடைமுறை தொடரும் என்றும் அதில் மாற்று வழிக்கு வாய்ப்பே இல்லை என்றும் அவர் கூறினார்.