பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் சாதியைக் குறிக்கும் கயிறுகளை அணியக்கூடாது என்ற அறிவிப்புக்கு திமுக எம்.பி. கனிமொழி வரவேற்பு தெரிவித்துள்ளார். பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஒரு சில பள்ளிகளில் மாணவர்கள் விதவிதமான நிறங்களில் கையில் கயிறுகள் கட்டியிருக்கிறார்கள். மஞ்சள், சிவப்பு, பச்சை, காவி நிறங்களில் கயிறுகள் கட்டுகிறார்கள். இதன்மூலம் இந்தக் கயிறுகள் அணிந்திருக்கும் மாணவர்களின் ஜாதிகள் கண்டுபிடிக்கப்படுகிறது எனத் பள்ளிக் கல்வி துறைக்கு புகார்கள் வந்தன. இந்தப் புகாரின் மீது பள்ளிக்கல்வி துறை விசாரணை நடத்தியது.  மாவட்ட கல்வி அதிகாரிகள் நடத்திய ஆய்வில் மாணவர்கள் கயிறுகளைக் கட்டி வரும் பள்ளிகளைக் கண்டறிந்து, நடவடிக்கை எடுக்கவும் பள்ளிக்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.


மேலும் பள்ளிக் கல்வித் துறையின் இயக்குனர் கண்ணப்பன் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், “ சில பள்ளிகளில், மாணவர்கள் வண்ண கயிறுகளை கைகளில் கட்டியுள்ளனர். அதேபோல, மோதிரம் அணிந்திருக்கிறார்கள். நெற்றியில் திலகமிட்டிருக்கிறார்கள். தாழ்ந்த ஜாதி, உயர்ந்த ஜாதி என தங்களின் ஜாதி அடையாளத்தை காட்டுவதற்காக இவ்வாறு அணிந்துள்ளனர். இதனால், மாணவர்கள் இடையே மோதல் ஏற்படுகிறது. இதுபோன்ற விஷயங்களை பள்ளிகளில் அனுமதிக்கக் கூடாது'' என்று அந்த சுற்றறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். 


பள்ளிக் கல்வித் துறையின் இந்த சுற்றறிக்கையை திமுக வரவேற்றுள்ளது. ‘சாதியைக் குறிக்கும் கயிறுகளை பள்ளிகளில் மாணவர்கள் அணியக் கூடாது என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது’ என திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார். ஆனால், இந்த சுற்றறிக்கைக்கு பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

 
இதுகுறித்து அவர் கூறுகையில், “கையில் கயிறு கட்டுவது, நெற்றியில் திலகமிடுவது இந்துக்களின் பழக்கவழக்கம். எனவே இந்தச் சுற்றறிக்கையை வாபஸ் பெற வேண்டும். மற்ற மதத்தினர் மத அடையாளங்களுக்கு ஏன் இயக்குநர் தடை விதிக்கவில்லை. இந்து மத உணர்வுக்கு எதிராகச் செயல்படும் பள்ளிக்கல்வி இயக்குநரை முதல்வர் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். இச்சுற்றறிக்கையை வாபஸ் பெறாவிட்டால் மாணவர்களுக்கு கயிறு கட்டும் போராட்டம் நடத்தப்படும்” என்று எச். ராஜா தெரிவித்துள்ளார்.