18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் 3-வது நீதிபதி விமலாவை நீக்கிவிட்டு புதிய நீதிபதி எம்.சத்யநாராயணாவை உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது.

தமிழக சட்டமன்ற சபாநாயர் தனபாலால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்பான வழக்கை, சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து உச்சநீதிமன்றத்துக்கு மாற்றக் கோரிய மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதிமுகவில் டிடிவி.தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மாற்றும்படி ஆளுநரைச் சந்தித்து மனு அளித்தனர். இதை அடுத்து கட்சி தாவல் தடை சட்டத்தின்கீழ் 18 சட்டமன்ற உறுப்பினர்களையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. 

இந்த அமர்வில் இடம் பெற்ற இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்புகளை அளித்தனர். தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, சபாநாயகர் எடுத்த முடிவு சரியானதே; இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும், 

மற்றொரு நீதிபதியான சுந்தர், சபாநாயகர் எடுத்த முடிவு தவறானது; சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லாது என தீர்ப்பளித்தார். இதையடுத்து இந்த வழக்கை மூன்றாவது நீதிபதி விசாரிப்பார் என்று தலைமை நீதிபதி கூறினார். இந்த வழக்கை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதியாக விமலா நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை உச்சநீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி, தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டமன்ற உறுப்பினர்களில் தங்க.தமிழ்ச்செல்வன் தவிர 17 பேர் சார்பிலும் மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் அருண்மிஸ்ரா, சஞ்சய் கிசன் கவுல் ஆகியோர் விசாரித்தனர். அப்போது, தகுதி நீக்க வழக்கை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட 3-வது நீதிபதி விமலாவை நீக்கியது. அவருக்கு பதிலாக உயர்நீதிமன்ற நீதிபதி எம்.சத்யநாராயணவை மூன்றாவது நீதிபதியாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமித்தனர்.