முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியே எதிர்பார்த்திருக்க மாட்டார் தம்மீது இப்படி ஒரு பகீர் குற்றச்சாட்டு எழும் என்று. ஏற்கனவே இடைத் தேர்தல், நாடாளுமன்ற பொதுத் தேர்தல், பாஜக அரசின் நெருக்கடி போன்ற பல பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கும் எடப்பாடிக்கு இப்படி ஒரு பிரச்சனை வரும் என அவர் கொஞ்சம் கூட எதிர்பர்த்திருக்க மாட்டார்.

கடந்த 11-ந்தேதி தெகல்கா புலனாய்வு பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரான மேத்யூஸ் சாமுவேல், கோடநாடு வழக்கின் குற்றவாளியான ‌சயன், மனோஜ், வாழையார் ரவி ஆகியோர் கூட்டாக டெல்லியில் பேட்டி அளித்தனர்.

அப்போது கோடநாடு கொலை தொடர்பாக பரபரப்பான வீடியோ ஒன்றையும் அவர்கள் வெளியிட்டனர்.  அதில் இந்த கொலைகளுக்குப் பின்னனியில் இருப்பது முதலமைச்சர் என குற்றம்சாட்டினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால் தன் மீதான இந்த குற்றச்சாட்டை மறுத்த எடப்பாடி பழனிசாமி  உடனடியாக அவர்களை கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து  தமிழக போலீசார் சயன் மற்றும் மனோஜ் ஆகிய இருவரையும் மட்டும் அள்ளி வந்தது..

அவர்களை கஸ்டடியில் எடுத்து எப்படியாவது தன் மீதான களங்கத்தை போலீஸ் மூலம் துடைக்க நினைத்தார் எடப்பாடி. சயன் மற்றும் மனோஜ் ஆகியோரை போலீசார் .சைதாப்பேட்டையில் உள்ள நீதிபதிகள் குடியிருப்பில் எழும்பூர் நீதிமன்ற நீதிபதி  சரிதா முன்னிலையில் ஆஜர் படுத்தினர்.

சயன், மனோஜ் மீதான விசாரணை நீதிபதி முன்பு 4 மணிநேரம் நடைபெற்றது.  விசாரணையின் முடிவில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் இருவரையும் விடுவிக்க நீதிபதி சரிதா உத்தரவிட்டார். இது போலீசுக்கு கிடைத்த முதல் அதிர்சசி.

தமிழக போலீசார் சயன் மற்றும் மனோஜ் இருவரையும் சிறையில் அடைக்க எவ்வளவோ முயன்றும்  நீதிபதி மறுத்துவிட்டார். மேலும் வழக்கு வரும் 18 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தற்போது  முதலமைச்சர் மீது மிகப் பெரிய குற்றச்சாட்டை கூறிய சயன் மற்றும் மனோஜ் ஆகிய இருவரும் சுதந்திர பறவைகளாகி விட்டனர். உடனயாக அவர்கள் இருவரும் கேரளாவில் உள்ள தங்கள் சொந்த ஊருக்கு பறந்துவிட்டனர். தற்போது கைக்கு எட்டியது வாய்க்கு எட்டலயே என ஆளும் தரப்பும், போலீசும் குழம்பிப் போயுள்ளதாக கூறப்படுகிறது