மறைந்த முன்னாள் முதலமைச்சர்  ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் உள்ள முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதை மறைக்கவே அவரது கார் டிரைவர் கனகராஜ் உள்பட 5 பேர் கொல்லப்பட்டனர் என்று கூலிப்படைத் தலைவன் ஷயான் டெல்லியில் பரபரப்பு பேட்டி ஒன்றை அளித்தார். டெகல்கா புலனாய்வு பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் இதற்கு பின்னணியில் இருந்து இதை வெளியிட்டார்.

மேலும், இவர்கள் கோடநாடு கொள்ளை, கொலை தொடர்பான ஆவணப் படத்தையும் வெளியிட்டு, பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டனர். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், அ.தி.மு.க. தொழில்நுட்பப் பிரிவு மாநில இணை செயலாளர் ராஜன் சத்யா என்பவர் இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் மனு அளித்தார். அந்தப் புகாரின் பேரில், பேட்டியளித்த கூலிப்படைத் தலைவன் ஷயான், டெகல்கா புலனாய்வு பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல், மற்றொரு குற்றவாளி மனோஜ் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில், மேத்யூசை பிடிக்க தனிப்படை போலீசார் டெல்லி சென்றனர். சயனை பிடிக்கவும் கேரளா சென்றனர்.  கோடநாடு வீடியோ விவகார வழக்கில் ஷயான், மனோஜ் ஆகியோரை சென்னையில் இருந்து சென்ற தனிப்படை காவல்துறையினர் டெல்லியில் நேற்று இரவு கைது செய்தனர்.

கைது செயப்பட்ட இருவரும்  விமானம் மூலம் இன்று அதிகாலை சென்னை அழைத்து வரப்பட்டனர். தற்போது அவர்களை சென்னை எழும்பூரில் உள்ள பழைய கமிஷனர் அலுவலகத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.