அண்மையில் குடியுரிமை திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் சட்டமாக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பெரும் போராட்டங்கள் நிகழ்ந்து வருகின்றன.

மேலும் இந்த சட்டத்தை எதிர்த்து போராடிய டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் கடுமையாக தாக்கப்பட்டனர். இதையடுத்து  மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக அமைப்பினர், மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரரும் தற்போதைய பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலியின் மகள் சனா கங்குலி குடியுரிமைச் சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இட்ட பதிவு  பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சனா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாக கூறப்படும் அதில்ப பத்திரிக்கையாளர்  குஷ்வந்த் சிங்கால் எழுதப்பட்டு  2003 ஆம் ஆண்டு வெளியான  THE END OF INDIA  என்ற புத்தகத்தின் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

“நான் முஸ்லீம் அல்ல, கிறிஸ்தவன் அல்ல அதனால் பாதுகாப்பாக இருக்கிறேன் என்று சந்தோஷப்பட்டுக்கொண்டிருக்கும் நீங்கள் முட்டாள்களின் சொர்க்கத்தில் வாழ்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். 

இடதுசாரி வரலாற்றாசிரியர்கள் மீதும் மேற்கத்திய இளைஞர்கள் மீதும் அவர்கள் வைத்த குறி நாளை உங்கள் மீதும் பாயும். நீங்கள் அடக்குமுறைக்குள் கொண்டுவரப் படுவீர்கள். பெண்கள் அணியும் பாவாடை இப்படி இருக்க வேண்டும். நீங்கள் இறைச்சி சாப்பிடக்கூடாது, மது அருந்தக் கூடாது, வெளிநாட்டுப் படங்களைப் பார்க்கக் கூடாது, வருடாந்திர யாத்திரையாக கோயிலுக்குச் செல்லக் கூடாது, 

அவர்கள் கூறும் பற்பசையைத்தான் பயன்படுத்த வேண்டும், பொது இடங்களில் கை குலுக்கி அன்பை வெளிப்படுத்திக் கொள்வற்குப் பதிலாக `ஜெய் ஸ்ரீராம்' என்று தான் முழங்க நேரிடும். 

யாரும் இங்கு பாதுகாப்பாக இருக்க முடியாது. இந்தியாவை உயிர்ப்புடன் வைத்துக்கொள்ள இதை உணர வேண்டும்” என்று அநந்த வாசகங்கள் உள்ளது. 


இந்த பதிவை ஏராளமானோர்  தங்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். தற்போது சனாவின் இந்தப் பதிவு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஆனால் இதற்கு விளக்கம் அளித்துள்ள சவுரவ் கங்கூலி, சனாவுக்கு 18 வயதுதான் ஆகிறது. அரசியலில் எதைப்பற்றியும் தெரிந்து கொள்ள முடியாத சிறிய வயதில் சனா இருக்கிறார்’, அதனால் அவரை விட்டு விடுங்கள் என்று தெரிவித்துள்ளார்.