கடந்த வெள்ளிக்கிழமையன்று காலையில் திருப்பூர் எம்.பி. சத்தியபாமாவின் மகனுக்கு அவரது வீட்டில் திருமண நிச்சயதார்த்தம். அதற்கு சில மணி நேரங்கள் முன்னதாக வியாழக்கிழமை இரவில் ‘எம்.பி.யையும், அவரது தம்பியையும் வெட்டிக் கொல்ல முயன்றார்’ எனும் புகாரில் சத்தியபாமாவின் கணவர் வாசு கைது செய்யப்பட்டார். 

பரபரப்பையும், ‘எம்.பி.க்கும் அவங்க புருஷனுக்கும் வேற வேலை இல்லப்பா!’ என்று சலிப்பையும் ஒரு சேர கிளப்பியது இந்த விவகாரம். ஏற்கனவே சில முறை தனக்கும், தன் மனைவிக்கும் இடையில் நடக்கும் உரசல் உரையாடல்களை வாட்ஸ் அப்பில் தானே பரப்பிவிட்ட பெருமைக்கு சொந்தக்காரர்தான் வாசு. அதனால் தான் அந்த சலிப்பு சிலருக்கு ஏற்பட்டது. 

இருந்தாலும் கூட கொலை முயற்சி வரையில் வாசுவின் கோபம் சென்றது பரபரப்பைக் கிளப்பியிருக்கும் நிலையில், கணவரின் செயல்கள் தொடர்பாக சத்தியபாமா வெளியிட்டிருக்கும் ஒரு தகவல் பெரும் அதிர்ச்சியை அள்ளிக் கொட்டியிருக்கிறது. 
கணவரின் அட்ராசிட்டியை விவரித்திருக்கும் சத்தியபாமா...”கிட்டத்தட்ட இருபது வருஷங்களுக்கும் மேலாக அவரோட மிக மோசமான கொடுமைகளை அனுபவிச்சிட்டிருக்கேன். காதலிச்சு கல்யாணம் பண்ணுன பாவத்துக்காக எல்லாத்தையும் பல்லைக் கடிச்சு சகிச்சுட்டு இருக்கிறேன். நான் பட்ட அசிங்கங்களும், அவமானங்களும் வேறெந்த பொண்ணுக்கும் வரக்கூடாது. 

அவரு என்னை கொல்ல முயற்சித்தது இந்த தடவைதான் உலகத்துக்கு தெரியும். ஆனா ஒரு ரகசியம் சொல்லவா? ஏற்கனவே ஒரு முறை என்னை அவர் கொல்ல முயற்சித்தார். 
சில வருஷங்களுக்கு முன்னாடி ஒரு நாள் இப்படித்தான் கடும் சண்டை போட்டுக்கிட்டு தோப்புக்கு போயிட்டார். எங்க பையன் அவரை தேடி அழுதான். உடனே நான் நைட்டுல தனியா காரை எடுத்துக்கிட்டு அவரை தேடிப்போயி கண்டுபிடிச்சு வீட்டுக்கு கூப்பிட்டேன். கடும் கோவத்துல இருந்த மனுஷன், என் மேலே மண்ணெண்ணெயை ஊற்றினார். நான் அசராம நின்னேன். வத்திப்பெட்டியை எடுத்து கொளுத்த முயன்றார். நான் கண்டுக்காம, கை கட்டி நின்னேன். நடக்குறது நடக்கட்டும், காதல் கல்யாணம் செஞ்சுகிட்டாலும் கூட நரகமா போயிட்டிருக்கிற இந்த வாழ்க்கைக்கு ஒரு முடிவு கிடைக்கட்டுமேன்னு சைலண்டா நின்னேன். ஆனா அப்புறம் அவரே பத்த வைக்காம விட்டுட்டார். 

அன்னைக்கு மட்டும் நான் அவரை தடுத்திருந்தால், இன்னும் கோபம் ஏறி என் கதை முடிஞ்சிருக்கும். இப்பவும் கூட அரிவாளை எடுத்துக்கிட்டு என் கதையை முடிக்கத்தான் வந்தார். ஆனா சிக்கிட்டார்.” என்றிருக்கிறார் கண்ணீர் மல்க. 

அதிகார மையமாக மக்களால் பார்க்கப்படும் ஒரு பெண் எம்.பி.க்கு பின்னால் இப்படியொரு சோகமா?!