சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விசாரிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்துள்ளது. 

சாத்தான்குளம் காவல் துறையினரால் தாக்கப்பட்டு ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரும் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மரணமடைந்தார்கள் என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த கொலை தொடர்பாக இதுவரை 10 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கை தற்போது சிபிஐ வசம் உள்ளது. 

இந்நிலையில், சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் விசாரிக்க வேண்டும் என வழக்கறிஞர் ராஜாராமன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், சாத்தான்குளம் சம்பவம் தொடர்பான விசாரணை நடக்கும் முன்பே இருவரும் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்கள் என பொய்யான தகவலை முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். குற்றவாளிகளை பாதுகாக்கும் செயலாகவே இதனை கருத வேண்டும். இது முதல்வர் வகித்து வரும் பதவிக்கும் அழகல்ல.

இந்த வழக்கு முடியும் வரை உள் துறை பொறுப்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் இருக்கக் கூடாது என்றும், படுகொலைக்கும் முதல்வருக்கு தொடர்பு உள்ளதா என விசாரிக்க வேண்டும் எனவும் ராஜராஜன் வலியுறுத்தி இருந்தார்.

இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் முதல்வரை விசாரிக்கும்படி உத்தரவிட முடியாது எனக் கூறிய நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர்.