சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா வரும் ஜனவரி 27 ஆம் தேதி விடுதலையாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், சசிகலா விடுதலையானால் அதிமுக நான்காக உடைய வாய்ப்புள்ளது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

மறைந்த முதல்வா் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கடந்த 1994 – 1995 ஆம் ஆண்டில் தாக்கல் செய்த வருமானவரிக் கணக்கில் சில தொகையைத் குறிப்பிடவில்லை. இதை வருமான வரி மதிப்பீட்டு அதிகாரி சுட்டிக்காட்டி சசிகலாவுக்கு எதிராக உத்தரவு ஒன்றை பிறப்பித்தாா். இந்த உத்தரவை வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீா்ப்பாயம் ரத்து செய்தது. இதை எதிா்த்து வருமான வரித்துறை ஆணையா் கடந்த 2008 ஆம் ஆண்டு சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.வி. தமிழ்ச்செல்வி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சசிகலா தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை முடிந்து வரும் ஜனவரி 27 ஆம் திகதி, பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா விடுதலையாக வாய்ப்பு உள்ளது. எனவே, அவா் வெளியே வந்ததும் சில விளக்கங்களைப் பெற்று பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என தெரிவித்தாா். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கின் விசாரணையை வரும் பிப்ரவரி 4 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.

சசிகலா விடுதலையானால் அதிமுகவில் பல அதிரடி மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் பலரும் பல கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், அமைச்சர்கள் பலர் சசிகலாவின் ஆதரவாளர்கள் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சசிகலா விடுதலை குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், ’’சசிகலா விடுதலையானால் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உயிர்த்தெழும் என பேசப்பட்டு வருகிறது. ஆனால் அதிமுக, அம்மா திராவிடம், பெரியவர், சின்னவர் திராவிடம் என நான்காக உடையவும் வாய்ப்பு இருக்கிறது ‘’என அவர் தெரிவித்தார்.