சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு வசதியான 5 அறைகள், தனி சமைல்காரர் என சொகுசாக இருந்து வந்ததாக தகவல் அறியும் உரிமை ஆர்வலர் என் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றனர். இதனை அடுத்து பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் து கடந்த 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் சிறையில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் சிறையில் உள்ள சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டதாக சிறைத் துறை டிஐஜி ரூபா குற்றம்சாட்டி இருந்தார். அதே போல் அவர் ஷாப்பிங் சென்றுவிட்டு வெளியே சிறைக்குள் வந்த வீடியோவையும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

 

இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசு ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையில் குழுவை அமைத்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் சிறையில் சசிகலாவுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக மூர்த்தி தகவல் கோரியிருந்தார்.

இதுகுறித்து ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த தகவலில், ’’சசிகலாவுக்கு சிறை அதிகாரிகள் 5 அறைகளை ஒதுக்கியிருந்தனர். அவருக்கு ஒரு அறை மட்டுமே ஒதுக்கப்பட்டது. எனினும் மேலும் 4 அறைகளை சிறைத் துறையினர் ஒதுக்கி உள்ளனர். அந்த 4 அறைகளில் தங்கியிருந்த பிற பெண் கைதிகள் சசிகலா வந்தவுடன் மற்ற கைதிகளுடன் நெருக்கடிக்கு மத்தியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

 

சிறையில் சமையல் செய்யலாம் என்ற சட்ட திட்டங்கள் ஏதும் இல்லாத நிலையில் அஜந்தா என்ற பெண் கைதி ஒருவரை சசிகலாவுக்கு சமையல் செய்ய சிறை துறை அதிகாரிகள் நியமனம் செய்துள்ளனர். சில நேரங்களில் கும்பல் கும்பலாக வருவோர் நேராக சசிகலா அறைக்கு சென்று அங்கு மணிக்கணக்கில் தங்கி பேசிக் கொண்டுள்ளனர்.  இவை அனைத்தையும் சிறைத் துறை டிஐஜி ரூபா கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 13- ம் தேதி முதல் முறையாக வெளிக் கொண்டு வந்தார்’’ என அவர் தெரிவித்துள்ளார். சசிகலா இத்தகைய சலுகைகளை அனுபவிக்க ரூ 2 கோடி லஞ்சமாக வழங்கப்பட்டதாக ஏற்கெனவே டிஐஜி ரூபா குற்றம்சாட்டி இருந்தார்.