15 நாள் பரோல் வரும் ஏப்ரல் 3 ஆம் தேதி முடிவடையும் நிலையில் சிறை நிர்வாக உத்தரவால் மீண்டும் சசிகலா பரப்பன அக்ரஹார சிறைக்கு சென்றார். 

சொத்துகுவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற சசிகலா அவரது கணவர் உடல்நலக்குறைவு காரணமாக 5 நாட்கள் பரோலில் வெளியே வந்தார். 

பின்னர் சில நாட்களுக்கு முன்பு சசிகலா கணவர் நடராஜன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அதே காரணத்தை கூறி சசிகலா பரோல் கேட்டார். ஆனால் பரோல் வழங்கப்படவில்லை. 

இந்நிலையில் நடராஜன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து பெங்களூரு சிறையில் இருந்த சசிகலா 15 நாள்  பரோலில் வெளியே வந்தார். 

அவர் தஞ்சை அருளானந்தநகரில் உள்ள வீட்டில் தங்கியுள்ளார். துக்கம் விசாரிப்பதற்காகவும்  தினம்தோறும் சசிகலாவை பார்த்து ஆறுதல் கூறுவதற்காகவும் பல்வேறு அரசியல் கட்சியினர், முக்கிய பிரமுகர்கள் வந்து செல்கின்றனர். 

நேற்று முன்தினம் அருளானந்த நகர் வீட்டில் பெண்கள் மட்டும் பங்கேற்கும் சடங்கு நடந்தது. இதில் சசிகலா மற்றும் நடராஜனின் நெருங்கிய உறவுக்கார பெண்கள்  50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

நேற்று காலை நடராஜனின் சொந்த ஊரான விளாரில் அவரது சகோதரர் குடும்பத்தினர் ஈமக்காரியங்கள் நடத்தினர். இதில்  நடராஜனின் சகோதரர்கள் 3 பேர் மற்றும் அவரது குடும்பத்தினர்,  சசிகலாவின் தம்பி திவாகரன், நடராஜனுக்கு ஈம காரியங்கள் செய்த டாக்டர் ராஜூ மற்றும் பங்காளி குடும்பத்தினர் பங்கேற்றனர். 

இந்நிலையில்,  சசிகலாவுக்கு ஏப்ரல் 3 ஆம் தேதி வரை பரோல் வழங்கப்பட்டுள்ள நிலையில் இன்றே அவர் சிறைக்கு திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியது.  அதன்படி தற்போது அவர் பரப்பன அக்ரஹார சிறைக்கு சென்றுள்ளார்.