sasikala under surveillance
கடந்த ஓராண்டாகவே தமிழக அரசியல் பல திருப்பங்களுடன் பரபரப்பாக உள்ளது. நேஷனல் சேனல்களுக்கே தமிழக அரசியல் திருப்பங்கள் தான் பிரேக்கிங் செய்தி..
முதல்வர் பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் அணிகள் இணைந்த பிறகு தினகரன் தரப்பினர் ஒதுக்கப்பட்டனர். இதையடுத்து முதல்வர் பழனிசாமிக்கு அளித்த ஆதரவை தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் திரும்பப் பெற்றனர். அதனால் சபாநாயகர் அவர்களை தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டார். தகுதிநீக்கத்தை எதிர்த்து எம்.எல்.ஏக்கள் தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
சசிகலா, சிறைக்கு சென்ற பிறகு தினகரனின் முழு கட்டுப்பாட்டில் இருந்த கட்சியினரும் அமைச்சர்களும் திடீரென அவருக்கு எதிராக மாறி அவரை ஓரங்கட்டியதன் பின்னணி என்ன என்ற கேள்வி இருந்துவந்தது. சசிகலாவுக்கும் கூட அந்த கேள்வி இருந்திருக்கலாம்.
இந்நிலையில், உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது கணவரான நடராஜனை பார்ப்பதற்காக பரோலில் வந்துள்ளார் சசிகலா. ஆனால் அவர் கட்சியில் ஏற்பட்டிருக்கும் குழப்பங்களை தீர்க்கவும் என்ன காரணத்தினால் தினகரன் ஒதுக்கப்பட்டார் என்பதையும் அறிந்துகொள்வதற்காகவும் தான் பரோலில் வந்தார் என்ற தகவலும் வெளியானது.
பரோலில் வெளியேவரும் சசிகலாவை அமைச்சர்கள் சிலர் சந்திக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து முதல்வர் பழனிசாமி, பரோலில் சசிகலா வெளியே இருக்கும் 5 நாட்களும் அவரை தீவிரமாக கண்காணிக்குமாறு உளவுத்துறைக்கு உத்தரவிட்டார். இதையடுத்து சசிகலாவின் ஒவ்வொரு நகர்வையும் உளவுத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
சிறைநிர்வாகம் விதித்த கடுமையான நிபந்தனைகளின் விளைவாக அமைச்சர்கள் யாரும் சசிகலாவை சந்திக்கவில்லை. எனினும் சில அமைச்சர்கள், சசிகலாவை போனில் தொடர்பு கொண்டு பேசியதாகத் தகவல்கள் வெளியாகின. அப்போது, கட்சியில் அனைவரையும் தினகரன் ஒதுக்கியதும் அவரது அடாவடியான நடவடிக்கைகளும் யாருக்கும் பிடிக்கவில்லை என்பதால்தான் அவரை ஒதுக்கியதாகவும் சசிகலாவிடம் தெரிவித்துள்ளனர்.
உளவுத்துறை சசிகலாவின் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணித்து வருவதால் சசிகலாவுடன் பேசிய அமைச்சர்கள் யார் யார் என்பது குறித்த விவரத்தை இந்நேரம் முதல்வரிடம் தெரிவித்திருக்கலாம் என்றே தெரிகிறது.
ஏற்கனவே அமைச்சர்களின் முரண்பட்ட பேச்சினால் அரசிற்கு அவப்பெயர் ஏற்பட்டதாகக் கருதும், அமைச்சரவையை விரைவில் மாற்ற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், சசிகலாவுடன் தொடர்புகொண்ட அமைச்சர்களைப் பற்றி உளவுத்துறை முதல்வருக்கு தகவல் கொடுக்கும் பட்சத்தில் அவர்கள் அமைச்சரவையிலிருந்து வெளியேற்றப்பட வாய்ப்புள்ளது.
சசிகலா பரோல் முடிந்து மீண்டும் சிறைக்கு செல்லும்வரை உளவுத்துறைக்கு ஓய்வு கிடையாது. அல்லும் பகலும் சசிகலாவின் ஒவ்வொரு நகர்வையும் உளவுத்துறை கண்காணித்து வருகிறது.
