அதிமுக தொடர் தோல்வியில் இருந்து மீள வேண்டும் என்றால், சசிகலாவையும், டி.டி.வி.தினகரனையும் மீண்டும் அதிமுகவில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் சிலர் பேசியது பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு அம்மாவட்ட செயலாளர் சையது கான் ஆதரவு அளித்தார்.

அதிமுகவை சரிவில் இருந்து மீட்டெடுக்க வேண்டும் என்றால், சசிகலாவையும், தினகரனையும் மீண்டும் அதிமுகவில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் முன்னிலையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையில் அதிமுக செயல்பட்டு வருகிறது. இவர்கள் தலைமையில் நாடாளுமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல், சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது. இதனையடுத்து, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் அதிமுக படுதோல்வி அடைந்தது. இதற்கு அதிமுக தலைமை சரியில்லை என்ற குரல்கள் எழ தொடங்கின. ஒற்றை தலைமை என்ற கோஷமும் எழுந்தது. 

இந்நிலையில், தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை, பெரியகுளம் லட்சுமிபுரத்தில் உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் பண்ணை வீட்டில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், நாளை மறுதினம் நடைபெறும் நகராட்சித் தலைவர் மற்றும் பேரூராட்சித் தலைவர் தேர்தலில் திமுகவினரிடம் விலை போய்விடக் கூடாது, நமக்கு வாய்ப்புள்ள இடங்களைத் தவிர மற்ற இடங்களில் தேர்தலில் இருந்தே விலகியிருப்பதுதான் நமக்கு நல்லது என்பது போன்ற ஆலோசனைகளை கட்சியினருக்கு ஓபிஎஸ் வழங்கினார்.

இதனையடுத்து, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவின் தோல்வி குறித்து சில நிர்வாகிகள் பேச தொடங்கினர். அப்போது அதிமுக தொடர் தோல்வியில் இருந்து மீள வேண்டும் என்றால், சசிகலாவையும், டி.டி.வி.தினகரனையும் மீண்டும் அதிமுகவில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் சிலர் பேசியது பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு அம்மாவட்ட செயலாளர் சையது கான் ஆதரவு அளித்தார். 

இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தேனி மாவட்ட செயலாளர் சையது கான்;- அதிமுக இதுபோன்று எப்போதும் தோற்றதில்லை. அதிமுகவில் மீண்டும் சசிகலாவை இணைக்க வேண்டும். கட்சிக்குள் உள்ளே பிளவே தேர்தல் தோல்விக்கு காரணம். சசிகலா, தினகரன் இருவரையும் கட்சியில் இணைத்தாலே பிரச்சனை தீர்ந்துவிடும். தொண்டர்களின் கோரிக்கையை தீர்மானமாக ஓபிஎஸ்ஸிடம் வழங்கியுள்ளோம் என்றார். இதனை, தீர்மானமான நிறைவேற்றி தலைமைக்கு அனுப்புமாறும் ஓபிஎஸ் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதற்கு எப்பாடி பழனிசாமியின் பதில் எதுவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். தற்போது, சசிகலா, தினகரன் விவகாரம் அதிமுகவில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.