Sasikala to head back to Bengaluru jail as her 5 day parole ends
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று, கடந்த பிப்ரவரி மாதம் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. அண்மையில் அவரது கணவர் எம். நடராஜனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதை அடுத்து அவர் சென்னை, பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நலன் குறித்த தகவல் அறிந்து, அவரைப் பார்ப்பதற்காக கர்நாடக சிறைத்துறையில் சசிகலா 15 நாட்கள் பரோலுக்கு விண்ணப்பித்தார். இந்நிலையில், நடராஜனுக்கு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதன் பின்னர், நடராஜனைப் பார்ப்பதற்காக 5 நாள் பரோல் சசிகலாவுக்கு வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில், கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி பரோலில் வந்தார்.
சென்னை, தி.நகரில் உள்ள தனது உறவினர் கிருஷ்ணப்பிரியா வீட்டில் தங்கிய சசிகலா அங்கிருந்து மருத்துவமனைக்குச் சென்று கணவரைப் பார்த்து வந்தார். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் என கட்சியினர் பலர் தன்னை சந்திக்க வருவார்கள் என எதிர்பார்த்திருக்க, அப்படி எதுவும் நடக்கவில்லையாம். இந்நிலையில் அவருக்கு அளிக்கப்பட்ட பரோல், அக்டோபர்12ம் தேதி வியாழன் அன்று முடிவடைந்தது. மேலும், பரோலை நீட்டிக்கச் சொல்லி மனு எதுவும் கொடுக்காமல், இன்றே திரும்பிச் செல்ல முடிவு செய்தார். பரோல் காலம் முடிவடைவதால், இன்று மாலை 6:00 மணிக்குள் அவர் சிறைக்குள் இருக்க வேண்டும். இதனால் இன்று காலை 9 மணி அளவில் தி.நகர் வீட்டில் இருந்து காரில் புறப்பட்டார் சசிகலா. பின்னர் இன்று மாலை 4.30 மணி அளவில் பெங்களூரு சிறைக்குச் சென்றடைந்தார். அவருடன் தினகரன், புகழேந்தி ஆகியோரும் உடன் வந்தனர். இதன் பின்னர் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா மீண்டும் அடைக்கப்பட்டார்.
