ஆர்.கே.நகரில் தேர்தல் நிறுத்தப்பட்டாலும், அதனால் கொஞ்சம் கூட அலட்டிக்கொள்ளாத தினகரன் தரப்பினர், சாதாரண கிளை பொறுப்பாளர் தொடங்கி, மாநில பொறுப்பாளர்கள் வரை அனைவரிடமும் பத்திரத்தில் கையெழுத்து வாங்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

கட்சியையும், இரட்டை இலை சின்னத்தையும் எப்படியாவது மீட்க வேண்டும் என்பதால், வரும் 17 ம் தேதி, தேர்தல் ஆணையத்தில் நடக்கும் விசாரணையின்போது, இந்த கையெழுத்து பாத்திரங்கள் அனைத்தும் ஒப்படைக்கப்பட உள்ளன.

ஆர்.கே.நகரில் தினகரன் வெற்றி பெறும் சூழல் உருவாகி விட்டது. அப்படி அவர் வெற்றி பெற்று விட்டால், கட்சியையும், சின்னத்தையும் அவரிடம் ஒப்படைக்க வேண்டி வரும் என்பதன் காரணமாகவே, தேர்தல் நிறுத்தப்பட்டது என்று தினகரன் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

உத்திரபிரதேசத்தில், அகிலேஷ் யாதவுக்கு ஆதரவாக பெரும்பாலான எம்.எல்.ஏ க்கள் இருந்ததால், தேர்தல் ஆணையம், கட்சியையும், சின்னத்தையும் அவருக்கு வழங்கியது. 

ஆனால், பெரும்பாலான எம்.எல்.ஏ க்கள், எம்.பி. க்கள் தினகரனுக்கு ஆதரவு தெரிவித்தும், தேர்தல் ஆணையம், கட்சி மற்றும் சின்னத்தை தங்களுக்கு  வழங்காமல் முடக்கி விட்டது என்றும் கூறுகின்றனர்.

எனினும், ஆர்.கே.நகர் தேர்தல் நிறுத்தத்தால், பெரிய அளவில் டென்ஷன் இல்லாமல், கட்சி மற்றும் சின்னத்தை எப்படியாவது மீட்டு விட வேண்டும் என்ற நோக்கில், தினகரன் தரப்பு தற்போது, பத்திரத்தில் கையெழுத்து வாங்கும் பணியில் மும்மரமாக ஈடுபட்டுள்ளது.

இதற்காக, பாத்திரங்கள் அதிக அளவில் வாங்கப்படுவதால், தமிழகத்தின் பல இடங்களிலும், ஸ்டாம்ப் பேப்பர்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாகக் கூறப்படுகிறது.

ஆர்.கே.நகர் தேர்தல் பணிகளின் போதே, பல கட்சி நிர்வாகிகளை வளைக்கும் பணியில் ஓ.பி.எஸ் அணி ஈடுபட்டுள்ளது, தெரிய வந்ததை அடுத்தே கையெழுத்து வேட்டை தீவிரப்படுத்தப் பட்டதாக சொல்லப்படுகிறது.

மறுபக்கம், முக்கிய அமைச்சர்கள் பலரையும் ரைடு என்ற போர்வையில் அலைக்கழிப்பது, மற்றவர்களை அச்சுறுத்தி அணி மாற வைப்பது போன்ற வேலையில், எதிர் தரப்பினர் ஈடுபட்டு வந்தாலும், அதற்கு கொஞ்சம் கூட சளைக்காமல் தினகரன் தரப்பு போராடி வருகிறது.

இதனால், அடுத்து என்னென்ன அதிரடிகள் அரங்கேறப்போகிறதோ? என்று அமைச்சர்கள் மற்றும் எம்.பி - எம்.எல்.ஏ க்கள் தரப்பு கடும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.