சிறையில் இருந்து வெளியான சசிகலாவின் ஒற்றை புகைப்படத்தை பார்த்து அதிமுகவின் உயர்மட்ட நிர்வாகிகள் அனைவரும் கதிகலங்கிப் போய் கிடக்கின்றனர்.

வரும் பிப்ரவரி மாதத்துடன் சசிகலாவின் தண்டனை காலம் முடிவடைகிறது. அதாவது இன்னும் 3 மாதத்திற்குள் சசிகலா பெங்களூரில் இருந்து விடுதலையாகி சென்னை திரும்புகிறார். அவருக்கு எதிராக மேலும் பல வழக்குகள் இருந்தாலும் கூட அவற்றில் எல்லாம் சிறை தண்டனைக்கு வாய்ப்பு குறைவு. அப்படியே சிறை தண்டனை கொடுத்தாலும் கூட உடனடியாக ஜாமீன் கிடைக்க கூடிய சூழல் தான் உள்ளது. 

தேர்தலில் போட்டியிட மட்டுமே சசிகலாவிற்கு தடை உள்ளது. ஆனால் அரசியல் செய்ய தடை இல்லை. இப்படியான சூழலில் தினகரன் கட்சியின் கூடாரத்தை காலி செய்யும் வேலையில் அதிமுக தீவிரம் காட்டி வருகிறது. சசிகலாவிற்கு சிறையில் உடல் நிலை சரியில்லை, வெளியே வந்தாலும் சசிகலாவால் தீவிர அரசியலில் ஈடுபட முடியாது, எனவே அவரை நம்பி பயனில்லை என்று கூறித்தான் அமமுக அபிமானிகள் அதிமுக பக்கம் இழுக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தான் சசிகலா சிறையில் சுடிதாருடன் மிகவும் கேஸ்வலாக இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியானது. சிறைக்குள் எடுக்கப்பட்ட அந்த புகைப்படத்தை சசிகலாவே திட்டமிட்டு வெளியே விட்டுள்ளார் என்கிறார்கள். இதன் மூலம் தனக்கு உடல் நிலை சரியில்லை என்று பரப்பப்படும் தகவல்களை தவிடுபொடியாக்க வேண்டும் என்பது தான் அவரது எண்ணம். அதோடு மட்டும் அல்லாமல் சிறையில் இருந்து வந்த பிறகு பாருங்கள் என்று மறைமுகமாக அவர் தனது அபிமானிகளுக்கு சொல்லாமல் சொல்லியுள்ளார் என்கிறார்கள்.

அதுமட்டும் அல்லாமல் சிறையில் இருந்து வந்த உடன் அரசியல் களம் தான் என்பதற்கு தற்போதே சசிகலா ஆயத்தமாகி வருவதாகவும் சொல்கிறார்கள். சசிகலாவின் இந்த புகைப்படத்தை பார்த்த அமைச்சர்கள் சிலர்கூட விம்பிப் போய் கிடப்பதாக சொல்கிறார்கள். ஜெயலலிதா இருக்கும் போது பார்த்த சின்ன அம்மா அப்படியே இருக்கிறார் என்று அவர்கள் தங்களுக்குள்பேசிக் கொண்டதாகவும் கூறுகிறார்கள்.

இந்த நிலையில் திடீரென சசிகலாவின் 1600 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. இது சசிகலாவை மன ரீதியில் பலவீனப்படுத்துவதற்கான முயற்சி என்கிறார்கள். ஆனால் இதை எல்லாம் எதிர்பார்த்து தான் சசிகலா இப்படி செய்து வருவதாகவும் அவர் சிறையில் இருந்து வெளியான பிறகு அரசியல் களம் சூடுபிடிக்கும் என்கிறார்கள்.