டி.டி.வி. தினகரனை நாடி நரம்பு, ரத்தம், சதையெல்லாம் கடுப்பு பொங்கிட வறுத்தெடுப்பதில் அமைச்சர் ஜெயக்குமாரை விஞ்சியோர் கிடையாது. ஆனால் அந்த ஜெயக்குமாரே அப்படியே ஷாக்காகிடுமளவுக்கு தினகரனை தாளித்து எடுத்திருக்கிறார் புகழேந்தி. எந்த புகழேந்தி? ‘மக்கள் செல்வர்! மக்கள் செல்வர்! மக்கள் செல்வர்!’ என்று தினகரனை தமிழகத்தில் தெருத்தெருவாய் கொண்டு போய் சேர்த்தாரே அதே புகழேந்திதான். 


சமீபத்தில் கோயமுத்தூரில் ஒரு அரங்க நிகழ்வை நடத்தி அதில்தான் தினாவை தோலை உரித்து  தொங்கவிட்டார் மனிதர். அந்த நிகழ்வில் ஜெயலலிதா, சசிகலாவின் படத்தோடு தன் போடோவையும் போட்டிருந்தார் புகழேந்தி. அ.ம.மு.க. என்று கொட்டை எழுத்தில் போடப்பட்டு நடந்த இந்த நிகழ்ச்சியில், தினகரனின் பெயர் எறும்பு சைஸில் கூட குறிப்பிடப்படவில்லை. இதெல்லாம் சசிகலாவுக்கு தெரிந்துதான் நடக்கிறதா? அல்லது சசியை கண்டுகொள்ளாமல் புகழ் இப்படி பண்ணுகிறாரா? எனும் டவுட்டு எல்லோருக்கும் இருக்கிறது. 

இதை பற்றி பேசும் அரசியல் விமர்சகர்கள் “ தினாவுக்கும், புகழுக்கும் நட்புறவு புட்டுக்கிச்சு! இதனால் தினாவுக்கு எதிராக புகழேந்தி பொங்கப்போகிறார்! என்பதெல்லாம் சசிகலாவுக்கு நன்றாகவே தெரியும். கோயமுத்தூர் மீட்டிங் பற்றியும் அவருக்கு முதலிலேயே தெரியும். ஆனால் எந்த தடையும் போடவில்லை சசி. சொல்லப்போனால் ‘நீ நடத்து, நான் கவனிச்சுக்கிறேன்!’ என்று ஊக்கம் கொடுத்து, தூண்டி விட்டார் என்றே கூட எடுத்துக்கலாம்!” என்கிறார்கள்.

சசிகலாவுக்கு அப்படி என்ன தினகரன் மீது அவ்வளவு கோபம்? என்று கேட்டால் “ஆர்.கே.நகரின் இடைத்தேர்தலில் தினகரன் பெற்ற வெற்றி என்பது சசிகலாவை பெரியளவில் சந்தோஷிக்க வைத்தது. அதன் பின் தினகரனிடம் பெரிய அளவில் எதிர்பார்த்தார் சசிகலா. ஆனால் தினகரனோ தங்களுக்கான அரசியலை செய்வதை விட தன்னை முன்னிலைப்படுத்துவதிலேயே குறியாய் இருந்தார். அ.ம.மு.க. எனும் கட்சியை தினகரன் ஆரம்பித்ததிலும் சசிக்கு உடன்பாடில்லை. அவசரம் வேண்டாம்! என்று சொல்லியும் கேட்கவில்லை. முதலில் அதில் சசிக்கு பெரும் பதவியை கொடுத்தவர், பின் அதிலிருந்து அவரை தூக்கினார். இதையெல்லாம் சசியால் சகிக்க முடியவில்லை. 

ஜெயா தொலைக்காட்சி விஷயத்தில் தினகரனின் நெருங்கிய கைகள் ஓவராய் தலையிட்டு, டார்ச்சர் கொடுக்கிறார்கள் என்பதை இளவரசியின் மகன் விவேக்கின் மூலம் அறிந்து கொண்டு கடுப்பானார் சசி.  அவர்களை தடுக்க சொல்லி கேட்டுக் கொண்ட பின்னும் தினகரன் கண்டுகொள்ளவே இல்லை. இதெல்லாம் சசிகலாவை ரொம்பவே கடுப்பாக்கியது. அ.தி.மு.க. மிக மூர்க்கமாக தன்னை வெறுக்க தினகரனே காரணம் என்பதை சந்தேகமே இல்லாமல் புரிந்து கொண்டிருக்கிறார் சசிகலா. 

இவற்றையெல்லாம் தாண்டி, சமீபகாலமாக ஒரு தகவல் ஓடுகிறது. அதாவது தண்டனைக்காலம் முடியும் முன்னரே சசியை வெளியே கொண்டுவந்து, அவரை அ.தி.மு.க.வின் தலைமை பதவியில் உட்கார வைத்திட பா.ஜ.க. விரும்புகிறது! என்பதுதான் அது. சசியின் வருகையை ஏற்றுக் கொள்ளும் அ.தி.மு.க.வின் முக்கிய புள்ளிகள், தினகரனை உறுப்பினராக சேர்க்க கூட தயாரில்லை! இதையும் சசி உணர்ந்திருக்கிறார். ஆக தன் பேச்சை கேளாத, அரசியலில் தங்களின் நிலையை கிட்டத்தட்ட தலைகீழாக்கிவிட்ட தினகரனை கொஞ்சம் நாள் ஒதுக்கி வைத்தால்தான் அ.தி.மு.க. புள்ளிகளின் முழு நம்பிக்கையை பெற முடியும். பதவியில் போய் அமர்ந்த பின் பார்த்துக்கலாம்! என்று நினைக்கும் சசி,  முழு மனதுடன் தான் புகழேந்தியை விட்டு தினகரனை விமர்சிக்கும் ஆயுதத்தை கையிலெடுத்துள்ளார்.எப்படி சுத்தி பார்த்தாலும் இது ஒரு டிராமாதான்.” என்கிறார்கள். 

ஏற்கனவே தினகரன் மீது கடுப்பிலிருந்த புகழேந்தி, சசியின் ஆசீர்வாதமும் கிடைத்ததும் ‘அ.ம.மு.க. எனும் கட்சியே இன்னும் சில நாட்களில் இல்லாமல், அழிந்து போகும்.’ என்று சாபமும் விட்டு, அக்கட்சியை அழிவின் விளிம்புக்கு தள்ளிப்போகும் எல்லா காரியங்களையும் செய்து கொண்டிருக்கிறாராம்.
வெளங்கிடும்!