Asianet News TamilAsianet News Tamil

அரசியல் ஆட்டத்தை ஆரம்பித்தார் சசிகலா..!! - ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமே திமுக, காங்கிரஸ்தான்.... பகீர் குற்றச்சாட்டு..!!

sasikala statement-for-jallikattai
Author
First Published Jan 4, 2017, 4:21 PM IST


மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தி.மு.க. அங்கம் வகித்தபோதுதான், ஜல்லிக்‍கட்டு தடை செய்யப்படும் நிலை வந்தது என்ற உண்மையை மறைத்துவிட்டு, மு.க.ஸ்டாலின், மக்‍களை திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபடுவதாக சசிகலா கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா விடுத்துள்ள அறிக்கையில்,ஜெயலலிதா  ஜல்லிக்‍கட்டை நடத்த மேற்கொண்ட கடும் முயற்சிகளை மறைத்துவிட்டு, எதிர்க்‍கட்சித் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் உண்மைக்‍கு புறம்பான கருத்துக்‍களை வெளியிட்டுள்ளார் என சசிகலா தெரிவித்துள்ளார். ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் சொல்லி அதை உண்மையாக்‍கும் முயற்சி கடந்த தலைமுறைகளின் தந்திரமாக இருந்திருக்‍கலாம்- ஆனால், இந்த அறிவியல் யுகத்தில் பொய்ப்பிரச்சாரங்கள் நெடுநேரம் உலவ முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

sasikala statement-for-jallikattai

தமிழர்களின் பாரம்பரிய நிகழ்ச்சியான ஜல்லிக்கட்டு என்னும் கிராமிய விழா தடையின்றி நடத்தப்பட வேண்டும் என்பதற்காக ஜெயலலிதா மேற்கொண்ட கடும் முயற்சிகளை மறைத்துவிட்டு; உச்ச நீதிமன்றத்தில் எடுத்துரைக்கக் கூறிய நுணுக்கமான வாதங்களை புறம்தள்ளிவிட்டு; ஜெயலலிதாவின்  செயல்களை கொச்சைப்படுத்தும் வகையில், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உண்மைக்குப் புறம்பான கருத்துகளை எதிர்க்கட்சித் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் பேசி இருக்கிறார்.  இது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் வகையில் உள்ளது.  

ஜெயலலிதாவின் , ஜல்லிக்கட்டுக்கான சட்டப் போராட்டத்தைப் பற்றிய முழு உண்மைகளையும் எதிர்க்கட்சித் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.  ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் சொல்லி, அதை உண்மையாக்கும் முயற்சி கடந்த தலைமுறைகளின் தந்திரமாக இருந்திருக்கலாம். அனைத்துத் தகவல்களும் ஒரு நொடியில் எல்லோரது விரல் நுணிக்கும் வந்துவிடும் இந்த அறிவியல் யுகத்தில் பொய்ப் பிரச்சாரங்கள் நெடு நேரம் உலவ முடியாது.
   

ஜல்லிக்கட்டுக்கு எதிராக 2006-ஆம் ஆண்டு முதலே பல்வேறு வழக்குகள் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டு, இறுதியாக 7.5.2014 அன்று உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது. 

திமுக பலம் வாய்ந்த உறுப்பினராக பங்கு பெற்றிருந்த காங்கிரஸ் கூட்டணி அரசு, 11.7.2011 அன்று காட்சி விலங்குகள் பட்டியலில் புலிகள், கரடிகள் போன்றவற்றுடன் காளை மாடுகளையும் சேர்த்து ஓர் அறிவிக்கையை வெளியிட்டது. 

இந்த அறிவிக்கை காரணமாகத் தான் ஜல்லிக்கட்டு நடைபெறுவதை உச்ச நீதிமன்றம் முழுமையாக தடை செய்தது.

sasikala statement-for-jallikattai

ஜெயலலிதா பிரதமரை சந்தித்து    பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவினை அளித்த போது, அதில் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கும் வகையில் மத்திய அரசு `காட்சி விலங்குகள் பட்டியலில் இருந்து காளை மாடுகள் நீக்கப்பட வேண்டும்' என்பதை வலியுறுத்திக் கூறினார்கள். 

மேலும், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்த ஏதுவாக அவசரச் சட்டம் ஒன்றை உடனடியாகக் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டு 22.12.2015 அன்று கடிதம் ஒன்றினையும் பாரதப் பிரதமருக்கு எழுதினார்.

ஆனால், மத்திய அரசு காட்சி விலங்குகள் பட்டியலில் காளைகள் தொடர்ந்து இருப்பதை உறுதி செய்யும் வகையில் 7.1.2016 அன்று ஒரு காப்புரையை மட்டும் வெளியிட்டதே தவிர, ஜல்லிக்கட்டுக்குத் தடை வரக் காரணமாக இருந்த அம்சத்தைத் தொடவே இல்லை.      

விலங்குகள் நல வாரியம் உள்ளிட்ட அமைப்புகள் 7.1.2016 அன்று மத்திய அரசு அளித்த காப்புரையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததால் 12.1.2016 அன்று உச்ச நீதிமன்றம் தடையை உறுதி செய்தது.  காட்சி விலங்குகள் பட்டியலில் காளை மாடுகள் நீடிக்கும் வரை தடையை நீக்க முடியாது என்பது தான் உச்ச நீதிமன்றத்தின் நிலைப்பாடாக இருந்தது. 

மத்திய விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் 1960, காட்சி விலங்குகள் பட்டியலில் காளைகளும் சேர்க்கப்பட்டு இருப்பது ஆகிய இரு மூலக் காரணங்களை உச்ச நீதிமன்றம் உறுதியாகப் பிடித்துக்கொண்டு கடந்த நவம்பர் மாதம் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்துவிட்டது.

ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதற்கு ஜெயலலிதாவின்  அரசு மேற்கொண்ட அனைத்து முயற்சிகளையும் மூடி மறைத்துவிட்டு, திமுக மத்தியில் காங்கிரசுடன் கூட்டணி ஆட்சியில் இருந்த போது மேற்கொண்ட ஒரு நடவடிக்கையால் ஜல்லிக்கட்டு தடை செய்யப்படும் நிலை வந்தது என்ற உண்மையை குழிதோண்டிப் புதைத்துவிட்டு, மக்களை திசை திருப்பும் முயற்சியில் எதிர்க்கட்சித் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் ஈடுபடுவது பொறுப்பான செயல் அல்ல என  சசிகலா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தமிழத்தின் உரிமைகளைக் காப்பதற்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்த ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் முயற்சியிலும், உண்மைகளை மூடி மறைக்கும் முயற்சியிலும் ஈடுபட வேண்டாம் என்று திரு. ஸ்டாலினை கேட்டுக் கொள்வதாகவும் சசிகலா கூறியுள்ளார்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios