சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விதித்த 4 ஆண்டுகள் சிறை மற்றும் 10 கோடி ரூபாய் அபராதம் என்ற தண்டனையை நேற்று உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.
இந்த தண்டனை உடனடியாக அமலுக்கு வரவதால் சசிகலா உள்ளிட்ட 3 பேரும் உடனடியாக பெங்களூரு விசாரணை நீதிமன்றத்தில் நீதிபதி அசோக் நாராயணன் முன்பு ஆஜராக வேண்டும் எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

3 பேரும் தண்டனை காலத்தை அனுபவிப்பதை உறுதி செய்ய விசாரணை நீதிமன்றம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உடனடியாக ஆஜராக உத்தரவிட்டும் சசிகலா உள்ளிட்டோர் இன்றும் பெங்களூரு செல்லாமல் சென்னையிலேயே முகாமிட்டுள்ளனர்.
இதனிடையே சரணடைவதில் இருந்து 4 வாரங்கள் கால அவகாசம் அளிக்க வேண்டும் என சசிகலா சார்பில் உச்சநீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரித்த நீதிபதிகள் உடனடியாக ஆஜராக வேண்டும் என கடுமை காட்டினர்.

இதனால் கண்டிப்பாக இன்று பெங்களூரு விசாரணை நீதிமன்றத்தில் சரணடைந்தே ஆக வேண்டும்.
இந்நிலையில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரத்தில் உள்ள சிறை சசிகலாவுக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. நீதிபதி அசோக் நாராயணனும் சசிகலா உள்ளிட்ட 3 பேரும் இன்று சரணடைவார்கள் என காத்துக் கொண்டிருக்கிறார்.
அதே நேரத்தில் இன்று மாலைக்குள் சரணடையவில்லை எனில் அவர்களுக்காக பிடி வாரண்ட்டும் தயார் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.
