Asianet News TamilAsianet News Tamil

போராட்டங்களில் இன்னுயிரை நீத்த விவசாயிகள்… பிரதமரிடம் இழப்பீடு கோரிய சசிகலா!!

தீபத்திருநாளில் விவசாயிகளின் வாழ்க்கையில், ஒளியேற்றிய பிரதமருக்கு நெஞ்சார்ந்த நன்றி என சசிகலா தெரிவித்துள்ளார். மேலும் போராட்டங்களில் இன்னுயிரை நீத்த அனைத்து விவசாயிகளின் குடும்பங்களுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

sasikala request pm modi regarding delhi farmers
Author
Chennai, First Published Nov 19, 2021, 2:57 PM IST

தீபத்திருநாளில் விவசாயிகளின் வாழ்க்கையில், ஒளியேற்றிய பிரதமருக்கு நெஞ்சார்ந்த நன்றி என சசிகலா தெரிவித்துள்ளார். மேலும் போராட்டங்களில் இன்னுயிரை நீத்த அனைத்து விவசாயிகளின் குடும்பங்களுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த ஆண்டு மூன்று புதிய வேளாண் சட்டங்களை கொண்டுவந்தது. விவசாயிகளுக்கு நன்மைபயக்கும் திட்டம் என்று பிரதமர் மோடி ஓராண்டாக கூறிவரும் நிலையில், இந்த சட்டங்களுக்கு எதிராக ஓராண்டாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் நூற்றுக் கணக்கான விவசாயிகள் உயிரிழந்தனர். உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்கிம்பூரில் போராடிய விவசாயிகள் மீது மத்திய இணை அமைச்சரின் மகன் கார் மோதியதில் விவசாயிகள் கொல்லப்பட்டனர். இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதை அடுத்து விவசாயிகள் இனிப்புகளை வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பை  பலரும் வரவேற்றுள்ளனர்.

sasikala request pm modi regarding delhi farmers

அந்த வகையில் மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற்ற பிரதமருக்கு, தமிழக மக்களின் சார்பாக நன்றி என சசிகலா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற்ற நம் பிரதமருக்கு, தமிழக மக்களின் சார்பாக என் நெஞ்சார்ந்த நன்றிகள். நம் இந்திய பிரதமர், நாட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டு, குறிப்பாக அனைத்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, எந்தவித அரசியல் கவுரவமும் பார்க்காமல், பெருந்தன்மையோடு, மூன்று புதிய வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெற்றுள்ளதற்கு, தமிழக மக்களின் சார்பாக, முதற்கண் என் நன்றியை மனதார தெரிவித்துக்கொள்கிறேன். தமிழக விவசாயிகளும், பிற மாநிலங்களை சேர்ந்த அனைத்து விவசாயிகளும் கடந்த ஒரு வருட காலமாக போராடினார்கள். இந்தி போராட்டத்தில், எவ்வித சாதிமத பேதமில்லாமல் மொழி வேறுபாடின்றி, ஒருமித்த கருத்தோடு, ஒன்றிணைந்து போராடிய விவசாயிகளின் கோரிக்கை இன்று ஏற்கப்பட்டிருப்பது உண்மையிலேயே மிகவும் வரவேற்கப்படவேண்டியது ஆகும். எங்கள் ஆசான் புரட்சித்தலைவர் பாடிய கடவுள் என்னும் முதலாளி, கண்டுடெடுத்த தொழிலாளி விவசாயி என்ற பாடலில் குறிப்பிட்டுள்ளதுப் போன்று, என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில், ஒழுங்காய் பாடுபடு வயல்காட்டில் உயரும் உன் மதிப்பு அயல்நாட்டில் என்ற புரட்சித்தலைவரின் பாடல் வரிகளுக்கு வடிவம் கொடுக்கும் விதமாக, உலக நாடுகள் எல்லாம் திரும்பி பார்க்கும் வகையில், நம் இந்திய திருநாட்டில், வேளாண்மையில் புதிய புரட்சி ஏற்பட்டு, விரைவில் வல்லரசாகும் என்பது உறுதி.

sasikala request pm modi regarding delhi farmers

நம் புரட்சித்தலைவியும், இதே கொள்கையை மனதில் வைத்து விவசாயிகளின் உரிமைகளுக்காக, தன் இறுதிமூச்சு வரை போராடினார் என்பதை, இந்த நேரத்தில் நினைவு படுத்த விரும்புகிறேன். மேலும், விவசாயிகள், விஞ்ஞானிகள் மற்றும் நிபுணர்கள் அடங்கிய குழுவை ஏற்படுத்தி விவசாய துறையில் நிலவும் இடர்பாடுகள் களையப்படும் என்று நம் பிரதமர் குறிப்பிட்டுள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது. அதே சமயம், கடந்த ஓராண்டாக நடைபெற்ற போராட்டங்களில், தங்கள் இன்னுயிரை நீத்த அனைத்து விவசாயிகளின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும், மேலும், அவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்றும், மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இந்த தீபத்திருநாளில் விவசாயிகளின் வாழ்க்கையில், ஒளியேற்றிய நம் பிரதமருக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று சசிகலா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios