அதிமுகவில் இருந்து ஜெயலலிதா இருக்கும்போதே நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவுக்கு வரும் மார்ச் 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் தாங்கி, வாட்ஸ்அப்பில் பரவி வருகிறது ஓர் அழைப்பிதழ்.

ஜெயலலிதாவை எதிர்த்து நாடாளுமன்றத்தில் பேசியதற்காக அக்கட்சியில் இருந்தும் மகளிர் அணி செயலாளர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டவர் சசிகலா புஷ்பா. ஜெயலலிதா இறந்த நிலையில் கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிடுவதற்காக மனு கொடுக்க அதிமுக தலைமைக் கழகத்துக்கு சசிகலா புஷ்பாவின் சார்பில் சென்ற சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வர் திலகர் கடுமையாக ரத்தக்காயம் ஏற்படும் வரை தாக்கப்பட்டார்.

சமீபத்தில் ஆர்.கே.நகரில் வெற்றிபெற்ற போது  தினகரனுக்கு வீட்டிற்க்கே சென்று தனது ஆதரவைத் தெரிவித்தார் சசிகலா புஷ்பா.

இந்த நிலையில், சசிகலா புஷ்பாவுக்கும் ஓரியண்டல் அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் இணை துணைவேந்தர் ராமசாமி என்பவருக்கும் திருமணம் வரும் மார்ச் 26ஆம் தேதி டெல்லியில் நடைபெறுவதாகத் திருமண அழைப்பிதழ் பரவி வருகிறது. இது அரசியல் வட்டாரங்களில்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சசிகலா புஷ்பாவின் நெருக்கமான அரசியல் வட்டாரங்களில் இதுபற்றி விசாரித்தபோது, ‘ஆமாம் உண்மைதான்’ என சொல்லுகிறார்கள். இந்த திருமண அழைப்பிதழ் தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.