தமிழகத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டு நடத்த வேண்டும் என மாநிலம் முழுவதும் தொடர் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடந்தது.

முன்னதாக கடந்த 15ம் தேதி மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் அங்கு திரண்டனர். இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை காண்பதற்காக இசையமைப்பாளர் “ஹிப் ஹாப் தமிழா” ஆதி, ஆர்யா, ஜி.வி.பிரகாஷ், சீமான், ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது, அங்கிருந்த சில வாலிபர்கள், காளைகளை அவிழ்த்துவிட்டனர். இதனால், போலீசார் தடியடி நடத்தி 250க்கு மேற்பட்டோரை கைது செய்தனர். இதனை கண்டித்து பல இடங்களில் போராட்டம் நடந்தது.

இதையொட்டி சென்னை மெரினாவில் சில மாணவர்கள் திரண்டு, ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தியும், கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக்கோரியும் ஆர்ப்பாட்டத்தை தொடங்கினர். பின்னர், இந்த ஆர்ப்பாட்டம் விஸ்வரூபம் எடுத்து, உலகையே திரும்பி பார்க்க செய்தது.

இதை தொடர்ந்து டெல்லி சென்ற முதல்வர் ஒ.பி.எஸ்., ஜல்லிக்கட்டு நடத்த தற்காலிக அவசர சட்டம் கொண்டு வந்தார். ஆனால், மாணவர்கள் அதனை ஏற்கவில்லை. தொடர்ந்து போராட்டம் நடத்தினர். பின்னர், போலீசார் தடியடி நடத்தி கலைய செய்தனர். இதனால், சென்னை நகரம் மட்டுமின்றி தமிழகமே போர்க்களமாக காட்சியளித்தது.

மாணவர்களின் அறப்போராட்டத்தால் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும், சமூக அமைப்பினரும், சினிமா நட்சத்திரங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகர், ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளித்த அதிமுக பொது செயலாளர் சசிகலாவுக்கு நன்றி என கூறி பல இடங்களில் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளார்.

அதில், ஜல்லிக்கட்டு நடத்த சட்டம் இயற்ற காரணமாக இருந்த அதிமுக பொதுச்செயலாளர் சின்னம்மா மற்றும் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நன்றி தெரிவித்து குறிப்பிட்டுள்ளார்.

பல லட்சம் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் போராடி பெற்ற உரிமை இது. மாணவர்களுக்கு பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவிக்காமல், அதிமுக பொது செயலாளருக்கு நன்றி தெரிவிப்பதா என ஜல்லிக்கட்டு பேரவை நிர்வாகிகளும், மதுரை மக்களும் ஆவேசமடைந்து கொதித்தெழுந்துள்ளனர்.