திட்டமிட்டபடி ஜனவரி 27-ல் சசிகலாவை சென்னைக்கு அழைத்துவர முடியாமல் போனாலும் அவர் எப்போது சென்னைக்குப் புறப்பட்டாலும் ஆயிரம் கார்களில் அவரைப் பின் தொடர ஆட்களை தயாராய் இருக்கச் சொல்லி இருக்கிறார் தினகரன். 

ஜனவரி 27-ல் சசிகலா விடுதலை உறுதி என தெரிந்ததுமே அமமுகவினருக்கும் அதிமுகவுக்குள் இருக்கும் சசிகலா ஆதரவாளர்களுக்கும் புதுத்தெம்பு பிறந்தது. அவரை வரவேற்று புரட்சிப் போஸ்டர்களும் முளைத்தன. சிறையிலிருந்து விடுதலையாகும் சசிகலாவை ஆயிரம் கார்கள் பின் தொடர தமிழகம் அழைத்து வரவேண்டும் என்பது சின்னம்மா விசுவாசிகளுக்கு தினகரன் போட்ட உத்தரவு. இது தொடர்பான அறிவுறுத்தல்கள் அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கும் பறந்தன. ஆதரவாளர்கள் பின் தொடர ஆர்ப்பாட்டமாய் தமிழகத்துக்குள் ரீ என்ட்ரி ஆகும் சசிகலாவை நேராக ஜெயலலிதாவின் சமாதிக்கு அழைத்துச் சென்று அஞ்சலி செலுத்த வைப்பது. அதன் பிறகு போயஸ் கார்டனில் அவருக்காக புதிதாகக் கட்டிமுடிக்கப்பட்டிருக்கும் இல்லத்துக்கு அவரை அழைத்துச் சென்று, ‘சின்னம்மா மீண்டும் கார்டனுக்கு வந்து விட்டார்’ என்ற செய்தியை எதிரிகளுக்குச் சொல்வது. இதுதான் தினகரன் முதலில் வைத்திருந்த பிளான்.

இந்தத் தகவல்கள் எல்லாம் முன்கூட்டியே வெளியே கசிந்ததால் தான் சசிகலா விடுதலையாகும் அதே நாளில் ஜெயலலிதா நினைவிடத் திறப்பு விழாவை நடத்தும் யோசனையை அதிமுக தலைமைக்குத் தந்தார் அந்தக் கட்சிக்கான வியூக வகுப்பாளர் சுனில். இப்படிச் செய்வதன் மூலம் சசிகலாவின் சென்னை வருகையால் ஏற்படும் எழுச்சியை இருட்டடிப்பு செய்துவிடலாம் என்பது சுனிலின் கணக்கு. அதனால் அவசர அவசரமாக நினைவு மண்டப திறப்பு விழாவுக்கு தேதி குறித்தது அதிமுக அரசு.

இந்த நிலையில், சசிகலாவுக்கு கொரோனா தொற்று என்ற செய்தி அமமுகவினரை அதிரடியாய் தாக்கியது. முக்கிய பொறுப்பாளர்கள் பதற்றத்துடன் பெங்களூருவுக்குப் பறந்தார்கள். அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் சசிகலா குடும்பத்தில் உள்ள அத்தனை பேரும் திகைத்துப் போய் நின்றார்கள்.

சசிகலா சிறையில் நல்ல நிலையில் இருந்தபோதே அவரிடமிருந்து ஒரு அறிக்கை வெளியானால் விடுதலையாகும் சமயத்தில் தொண்டர்கள் மத்தியில் புதிய எழுச்சி பிறக்கும் என்று ஒரு யோசனை அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் மூலமாகச் சொல்லப்பட்டதாம். ஆனால், சசிகலா இதற்கு சம்மதிக்கவில்லை என்கிறார்கள். 27-ம் தேதி விடுதலைக்குப் பிறகும் அதே கோரிக்கை வைக்கப்பட்டதாம். அதற்கு, “அறிக்கை எல்லாம் எதுவும் வேண்டாம்... வெளியில் வந்ததும் நானே நேரடியாகப் பேசிக் கொள்கிறேன்” என்று சொல்லி விட்டாராம் சசிகலா.

இதையடுத்து,“27-ம் தேதி அம்மா நினைவிடத் திறப்பு விழாவுக்காக தமிழ்நாடு முழுவதிமிருந்து அதிமுகவினரை சென்னைக்கு வரவழைத்திருக் கிறார்கள். அந்த சமயத்தில் நாமும் நமது ஆட்களை அங்கு அனுப்பி, அம்மாவையும் சின்னம்மாவையும் வாழ்த்தி கோஷம் போடவைக்கலாம்” என்று ஒரு யோசனையை தினகரன் சொன்னாராம். அதையும் பிடிவாதமாக மறுத்துவிட்ட சசிகலா, “நாளைக்கு நானும் நீங்களும் இருக்க மாட்டோம். ஆனா, அக்காவின் புகழ் என்றைக்கும் நிலைத்திருக்க வேண்டும். அதற்கு ஏற்ற வகையில் அவரது நினைவு மண்டபத்தை பிரம்மாண்டமாக கட்டி முடிக்க வேண்டும். அதை நானே எனது கையால் திறந்து வைப்பேன்” என்று எடப்பாடியிடம் சொன்னவள் நான். அப்படியிருக்கையில் அக்காவின் புகழுக்கு களங்கம் ஏற்படும் விதமான எந்தவொரு அசம்பாவிதத்தையும் நினைவிட திறப்பு விழாவில் ஏற்படுத்தி விடாதீர்கள்” என்று சொன்னதாகச் சொல்கிறார்கள்.

இதனிடையே, சசிகலாவுக்கு கரோனா என்றதுமே தமிழக அரசின் முக்கிய அதிகாரிகள் சிலர் கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சரை தொடர்பு கொண்டு சசிகலாவின் உடல்நிலை குறித்து மாறி மாறி பதற்றமாய் விசாரித்தார்களாம். அத்துடன், அவருக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளையும் அளிக்கும்படியும் கர்நாடக அமைச்சரைக் கேட்டுக் கொண்டார்களாம் தமிழக அதிகாரிகள். “அதிகாரத்தில் இருப்பவர்களின் ஆலோசனை இல்லாமல் இந்த விசாரணைகள் நடந்திருக்குமா?” என்று கேள்வி எழுப்புபவர்கள், “சசிகலாவின் உடல் நிலையில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் பழி தங்கள் பக்கம் திரும்பிவிடக் கூடாது என்ற எச்சரிக்கையுணர்வுகூட இதற்குக் காரணமாக இருக்கலாம்” என்கிறார்கள்.

திட்டமிட்டபடி ஜனவரி 27-ல் சசிகலாவை சென்னைக்கு அழைத்துவர முடியாமல் போனாலும் அவர் எப்போது சென்னைக்குப் புறப்பட்டாலும் ஆயிரம் கார்களில் அவரைப் பின் தொடர ஆட்களை தயாராய் இருக்கச் சொல்லி இருக்கிறார் தினகரன். சசிகலா வரும் வழிநெடுகிலும் உள்ள மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் இந்த அணிவகுப்பில் கலந்து கொள்வார்களாம். சற்றே அமைதிகாக்கும்படி சசிகலா சொன்னாலும் அவரது அனுமதி இல்லாமலேயே இந்த ஏற்பாடுகளை எல்லாம் செய்துவைத்திருக்கிறாராம் தினகரன்.

முந்தைய திட்டப்படி சசிகலா போயஸ் தோட்டத்தின் புதிய இல்லத்துக்கு வருவதாக இருந்தது. ஆனால், இப்போது அந்த பிளானை மாற்றி இருக்கிறார்கள். டி.நகரில் ஹபிபுல்லா சாலையில் இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியாவின் வீடு இருக்கிறது. இதன் அருகே சசிகலாவுக்கும் ஒரு வீடு இருக்கிறது. தற்சமயத்துக்கு சசிகலா தங்குவதற்காக இந்த வீடு தயாராகிவிட்டது. தனக்கு விடுதலை கிடைத்துவிட்டாலும் இத்தனை நாளும் தன்னுடன் இருந்து தன்னைக் கவனித்துக் கொண்ட இளவரசியும் விடுதலை கிடைத்து வெளியில் வரவேண்டும். அவரையும் அழைத்துக் கொண்டே சென்னைக்குத் திரும்ப வேண்டும் என நினைக்கிறாராம் சசிகலா.

இதனிடையே, மூச்சுவிட சிரமப்பட்ட சசிகலாவுக்கு வெளியிலிருந்து பிராண வாயு செலுத்தப்பட்டது. ஜனவரி 26-ம் தேதியுடன் பிராண வாயு நிறுத்தப்பட்டு அவர் இயல்பாக சுவாசிக்க ஆரம்பித்தார். இதையடுத்து ஜனவரி 30 அல்லது 31-ம் தேதி அவருக்கு மீண்டும் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படலாம் என்கிறார்கள். கரோனா தொற்று இல்லை என்பது உறுதியானால் உடனடியாக அவர் மருத்துவ மனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படலாம்.

அப்படியே அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாலும் குறிப்பிட்ட சில தினங்களுக்கு சுய தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுவார். அநேகமாக பெங்களூருவில் உள்ள தனக்குச் சொந்தமான வீட்டிலேயே சசிகலா தன்னை சுயதனிமைப்படுத்திக் கொள்ள வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள். பிப்ரவரி 5-ம் தேதி இளவரசியும் விடுதலையாகி வெளியில் வந்த பிறகு அவரையும் அழைத்துக் கொண்டு சென்னை திரும்புவதே சசிகலாவின் இப்போதைய பிளான் என்கிறார்கள். ஆனால், தினகரனோ மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனதுமே சசிகலாவை ஆர்ப்பாட்டமாய் சென்னைக்கு அழைத்து வந்து அதிமுகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கத் துடிக்கிறாராம். அவர் என்ன நினைத்தாலும் முடிவு சசிகலாவின் கையில் தான் இருக்கிறது.

அதேநேரம், ஆர்ப்பாட்டமாய் சென்னைக்கு விஜயம் செய்தாலும் இப்போதைக்கு ஜெயலலிதா நினைவிடத்துக்கு சசிகலா செல்லமாட்டார் என்ற பேச்சும் ஓடுகிறது. ஆதரவாளர்களின் பிரம்மாண்ட வரவேற்புடன் சென்னைக்குப் புறப்படும் சசிகலா, நேராக டி.நகர் வீட்டுக்குச் செல்வார். கரோனா சிகிச்சை மட்டுமல்லாது அவருக்கு மேலும் சில மருத்துவ சிகிச்சைகளும் இப்போதைக்குத் தேவைப்படுகிறது. வீட்டில் இருந்து சிகிச்சை எடுத்தபடியே தனது வருகைக்குப் பிறகான தமிழக அரசியலின் தட்பவெப்ப நிலையையும் அவர் உற்று நோக்குவார். சசிகலா விடுதலையை வரவேற்று நெல்லை மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் சுப்பிரமணிய ராஜா உள்ளிட்டவர்கள் வெளிப்படையாகவே போஸ்டர் ஒட்டி வருகிறார்கள். இது தவறான முன்னுதாரணமாகி விடும் என்பதால் இப்படிக் கிளம்புகிறவர்களை உடனுக்குடன் கட்சியைவிட்டு கட்டம்கட்டி வருகிறது அதிமுக தலைமை.

சசிகலா இன்னும் முழுமையாக வெளியில் வராமல் இருக்கும் போதே அதிமுகவுக்குள் அவருக்கான ஆதரவுக் குரல்கள் வெடித்துக் கிளம்ப ஆரம்பித்திருக்கின்றன. அவர் சென்னைக்கு வந்துவிட்டால் இந்த ஆர்ப்பரிப்புகள் இன்னும் அதிகரிக்கலாம். அதிமுக தான் தன்னுடைய கட்சி என்பதில் தீர்க்கமாக இருந்தாலும் இதுபோன்ற ஆதரவுக் குரல்கள் இப்போதைக்கு தனக்குத் தேவை என சசிகலாவும் நினைக்கிறார். அவருக்கு ஆதரவாக இப்போது இங்கொன்றும் அங்கொன்றுமாய் கிளம்பி இருக்கும் ஆதரவுக் குரல்கள் அடுத்த சில நாட்களில் இன்னும் அதிகரிக்கலாம். அந்தக் குரல்களை அடக்க அதிமுக தலைமை தனது அதிகாரத்தைப் பயன்படுத்தலாம். அது சசிகலாவின் செல்வாக்கை மேலும் அதிகரிக்கலாம். அதற்கான காலம் கனியும் வரை இன்னும் சில நாட்களுக்கு பொறுத்திருக்கலாம் என்பதே சசிகலாவின் இப்போதைய திட்டம்.

அதிமுகவுக்குள் தனக்காக எழும் ஆதரவுக் குரல்களையும், தன்னை மையப்படுத்தி தமிழக அரசியலில் அடிக்கப் போகும் அலையையும் பொறுத்து இன்னொரு நாளில் தனது ஆதரவாளர்கள் புடைசூழ அக்காவின் நினைவிடத்துக்கு ஆர்ப்பாட்டமாய் புறப்படுவார் சசிகலா. அநேகமாக அது பிப்ரவரி 24-ம் தேதியாக இருக்கலாம். அன்று தான் ஜெயலலிதா பிறந்த நாள் என்கிறது தமிழக அரசியல் வட்டாரம்.