sasikala minister drove away by people

அதிமுக இரண்டாக உடைந்ததையடுத்து சசிகலா அணி மற்றும் ஓபிஎஸ் அணி என பிரிந்து செயல்பட்டு வருகின்றன, சசிகலா அணியில் எம்எல்ஏக்கள் , அமைச்சர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்து வந்தாலும், கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் ஓபிஎஸ் அணிக்கே ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

அதே நேரத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், முன்னாள் எம்எல்ஏக்கள் நடுநிலை வகிக்கும் நிர்வாகிகள் உள்ளிட்டோரை சசிகலா தரப்புக்கு இழுக்கும் வேலைகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் கடலூர் அருகே ஆள் பிடிக்கும் வேலையில் இறங்கிய அமைச்சர் சம்பத்தை அதிமுக தொண்டர்கள் முற்றுகையிட்டு விரட்டி அடித்தனர்.

அதிமுக வில் மூத்தவராக இருந்தும் கட்சியால் ஓரம்கட்டப்பட்டு, தற்போது ஓபிஎஸ் அணியில் இருப்பவர் முன்னாள் எம்எல்ஏ துரை.அன்பரசன். இவரை சமாதானம் செய்து சசிகலா அணிக்கு அழைத்து வருவதற்காக அமைச்சர் சம்பத், கடலூர் சாவடி பகுதியில் உள்ள துரை.அன்பரசன் வீட்டுக்குச் சென்றார்.

இதையறிந்த அதிமுக தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர், துரை.அன்பரசன் வீட்டுக்கு சென்று அமைச்சர் சம்பத்தை முற்றுகையிட்டனர்.

இதனையடுத்து அங்கிருந்து அவசரமாக அமைச்சர் சம்பத் தப்பிச் சென்றார். ஆனால் துரை.அன்பரசன் பேசும்போது , அமைச்சர் சம்பத் என்னை சசிகலா அணிக்கு அழைத்தார், ஆனால் நான் மறுத்துவிட்டேன் என்று தெரிவித்தார்.