சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையிலுள்ள சசிகலா நன்னடத்தை விதிகளின் வெளியே வந்ததும் அமமுகவை கலைத்துவிட்டு அதிமுகவை பலப்படுத்த பல்வேறு அதிரடி நடவடிக்கை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சொத்துகுவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியும், அ.தி.மு.க.வின் முன்னாள் பொதுச்செயலாளருமான சசிகலா நான்கு ஆண்டு சிறை தண்டனையை அனுபவித்து வருகிறார். சசிகலா சிறைக்கு போய் கிட்டத்தட்ட இரண்டரை வருடங்கள் ஆகிறது. இந்நிலையில், நன்னடத்தை விதிகளின் படி, டிசம்பர் அல்லது ஜனவரி மாதம் சசிகலா சிறையில் இருந்து வெளியே வருவார் என அமமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி தகவல் தெரிவித்துள்ளார். 

அதேபோல், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் மற்றும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியும் சசிகலா வெளியே கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.  

இந்நிலையில், சசிகலா சிறைக்கு செல்லும் முன்பு அதிமுகவை என்னிடம் இருந்து எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது. நான் எங்கு இருந்தாலும் அதிமுக மீதான சிந்தனை எப்போதும் இருக்கும் என தெரிவித்து இருந்தார். ஆகையால் பெங்களூரு சிறையிலிருந்து விடுதலையாகி வந்தாலும் ஜெயலலிதாவை போல் திமுக மற்றும் பாஜகவிற்கு எதிராக தனது அரசியல் நிலைப்பாட்டில் இருப்பார் என்று கூறப்படுகிறது. 

மேலும், ஜெயலலிதா வழிநடத்திய அதிமுகவை அழிக்க நினைக்க மாட்டார். ஆகையால் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களையும், பிரிந்து கட்சி ஆரம்பித்தவர்களையும் அதிமுகவில் இணைக்க பார்ப்பார் என்றும் கூறுகின்றனர். இதன் காரணமாகவே வேலூர் மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலை டிடிவி.தினகரன் புறக்கணித்ததாக கூறப்படுகிறது.