Sasikala Likely to be Questioned After IT Sleuths Recover Rs 1430 Cr From Premises Linked to Her
தமிழகத்தைக் கலக்கிய சென்ற வார வருமான வரித் துறை சோதனைகளின் போது, கண்டறியப் பட்டவை குறித்து சசிகலாவிடம் கேள்வி கேட்கப் போகிறது வருமான வரித்துறை.
கடந்த வாரம் சசிகலாவின் குடும்பத்துக்குச் சொந்தமான 187 இடங்களில் சோதனைகள் தொடங்கின. குறிப்பாக, ஊடகம் என்ற காரணத்தால், சோதனைகள் எதுவும் நடைபெறாது என்ற தைரியத்தில், ஜெயா டிவி., மூலம் பதுக்கப்பட்ட பல கோடி சொத்துக்கள் குறித்த ஆவணங்களை வருமான வரித்துறையினர் கண்டறிந்தனர். அவற்றின் முடிவில் விகே.,சசிகலாவுக்கு தொடர்புடையதாக ரூ.1,430 கோடி அளவுக்கு கணக்கில் காட்டப்படாத வருமானம் குறித்து வருமான வரித்துறையினர் கண்டறிந்தனர். இது குறித்து பெங்களூரில் பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலாவிடம் விளக்கங்களைக் கேட்பது என்று வருமான வரித்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

புதன்கிழமை இன்று வருமான வரித்துறையினர் மூலம் கசிந்த தகவல்களின்படி, இந்த சோதனைகளில் கண்டெடுக்கப்பட்ட மற்றும் சந்தேகத்துக்குரிய ஆவணங்களின் படி, சிறையில் இருக்கும் சசிகலாவிடம் வருமான வரித்துறையினர் விளக்கம் கேட்க உள்ளனர்.
என்னதான், எங்களிடம் எதுவும் கண்டெடுக்க முடியாது என்று டிடிவி தினகரன் தெம்பாகக் கூறினாலும், அவரது அண்மைக்கால பேச்சும் செயல்பாடுகளும் உடல் மொழியும் அவரை இப்போது வில்லனாகக் காட்டிக் கொண்டிருக்கின்றன. தவறு செய்வதை துணிந்து செய்து, துணிந்து சொல்லும் அவரது தன்மை இப்போது மேலும் அவர் பக்கம் சந்தேகத்தின் வலையை இறுக்கியிருக்கிறது.
தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனைகளின் போது, 1500 கோடி ரூபாய் மதிப்புள்ள கணக்கில் வராத சொத்துகள் குறித்து கண்டறியப் பட்டுள்ளதாக, தில்லியில் உள்ள வருமான வரித்துறை அதிகாரிகள் செய்தி நிறுவனத்திடம் இன்று கூறியுள்ளனர். இன்னும் முழுதாக ஆவணங்களைப் பரிசீலித்து கணக்கெடுக்கப் படாத நிலையிலும், முதல் கட்ட விசாரணையில் தெரியவந்ததன் அடிப்படையில் இது குறித்து விளக்கம் கேட்கப் படவுள்ளதாம்.

ஏற்கெனவே, வருமானத்துக்குப் பொருந்தாத வகையில், வருமானத்துக்கு மீறி சொத்துகளைச் சேர்த்த விவகாரத்தில்தான் சசிகலா தண்டனைக்கு உள்ளாகி சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே மேலும் அவரிடம் இது குறித்து, அதாவது இப்போது கண்டறியப் பட்ட சொத்துகளும் சேர்த்து விசாரிக்கப்படவுள்ளது.
