ஜனவரி 27ம் தேதி விடுதலையாகவிருந்த நிலையில் சசிகலா உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்குமோ என சந்தேகம் ஏற்பட்டுள்ளது என சசிகலா தம்பி திவாகரன் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார். 

சொத்து குவிப்பு வழக்கில் கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி முதல் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். 4 வருடம் சிறைத்தண்டனை நிறைவடைந்ததையடுத்து  வரும், 27ம் தேதி சசிகலா விடுதலையாக உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக செய்யப்பட்டு வந்தன. மேலும், சசிகலா வருகையால் தமிழக அரசியலில் பெரும் மாற்றம் ஏற்படும் என தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. 

ஒரு வாரத்தில் விடுதலையாக உள்ள சூழலில், நேற்று பிற்பகலில் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. காய்ச்சல், மூச்சுத் திணறல் இருந்ததால், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல சிறைத்துறை மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர். இதையடுத்து, சசிகலா பெங்களூரு சிவாஜி நகரில் உள்ள போரிங் அரசு மருத்துவமனைக்கு சக்கர நாற்காலியில் அமர வைத்து அழைத்துச் செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சசிகலா தம்பி திவாகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- ஜனவரி 27-ல் விடுதலையாகவிருந்த நிலையில் சசிகலா உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்குமோ என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. சசிகலாவுக்கு கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் இருந்துள்ள நிலையில் சிறையில் சரியான சிகிச்சை தரவில்லை என குற்றம்சாட்டியுள்ளார். 

நேற்று மாலை மூச்சுத்திணறல் ஏற்பட்ட பிறகுதான் சிறை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக கூறுகின்றனர். பரப்பன அக்ரஹா சிறை மருத்துவமனையில் சாதாரண எக்ஸ்ரே மட்டுமே எடுத்து பார்த்துள்ளனர். தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிடி ஸ்கேன் எடுக்க கோர்ட் அனுமதி தேவை. அதன் பின்னர் சிகிச்சை அளிக்க வேண்டும். சிறையிலிருந்து சசிகலா 27-ம் தேதி விடுதலையாக உள்ள நிலையில் சரியாக சிகிச்சை தராமல் தாமதப்படுத்துகின்றனர். எங்களுக்கு துரோகத்திற்கு மேல் துரோகம் நடந்து வருகிறது. பணம் பாதாளம் வரை பாயும் என்பார்கள், தற்போது பணம் எதுவரை பாய்ந்தது என தெரியவில்லை. 

இதனிடையே, சசிகலா சிகிச்சை பெறும் பெங்களூரு சிவாஜிநகர் அரசு மருத்துவமனைக்கு அவரது உறவினர்களான விவேக், விக்ரம், வெங்கடேஷ், நெர்முக உதவியாளர் கார்த்திக், ஜெய் ஆனந்த் உள்ளிட்டோர் சென்றுள்ளனர். இதனையடுத்து, சசிகலாவை அரசு மருத்துவமனையில் இருந்து தனியார் மருத்துவமனைக்கு மாற்ற உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சிவாஜிநகர் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவ வசதிகள் இல்லை என உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.