மறைந்த ஜெயலலிதாவின் பிறந்தநாளை ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கியும், நலத்திட்ட உதவிகளையும் வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டும் என அதிமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா பெங்களூரு சிறையில் இருந்து கடிதம் எழுதியுள்ளார்.

ஜெயலலிதாவின் பிறந்தநாளை அதிமுக தொண்டர்கள் நாளை தமிழகம் முழுவதும் கொண்டாட உள்ளனர்.

இதையொட்டி அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா எழுதியுள்ள கடிதத்தில் , கடந்த 33 ஆண்டுகளாக ஜெயலலிதாவின் பிறந்தநாளை அவருடன் இருந்து கொண்டாடியதாகவும், தற்போது ஜெயலலிதாவின் 69வது பிறந்தநாளில் அவர் இல்லாததை எண்ணி மிகவும் வருந்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவரது பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம், ஏழை எளியோர்க்கு நலத்திட்ட உதவிகள் ஆகியவற்றை செய்யுமாறும் அதிமுக தொண்டர்களுக்கு சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு கட்சியையும் அரசையும் நிலைக்கச் செய்ய உறுதிபூணுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதிமுக ஆட்சியை எதிரிகள், துரோகிகள் வீழ்த்த நினைத்த போது ஜெயலலிதாவின் ஆன்மாதான் நம்மை வழி நடத்தியது என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ள சசிகலா, அவரது ஆன்மா இளைபாறும் வகையில் அவரது பிறந்த நாளை அதிமுகவினர் கொண்டாட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஜெயலலிதாவின் பிறந்த நாளில் அவரது புகழ் நிலைத்திருக்கும் வண்ணம் அதிமுகவினர் செயல்பட வேண்டும் என்றும், ஏழைய எளியோருக்கு உணவு வழங்கி, நலத்திட்ட உதவிகளை வழங்கவும் சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பொது இடங்களில் ஜெயலலிதாவின் உருவப்படங்கள் வைக்கப்பட்டு மலர் தூவி மரியாதை செலுத்துமாறும் அவர், அதிமுகவினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.