லலிதா ஜூவல்லரி நகைக்கொள்ளையில் மாட்டிக் கொண்ட மணிகண்டன் பாஜக ஆதவாளர் என தகவல்கள் பரப்பப்பட்டு வந்த நிலையில் அவர் சசிகலாவின் சகோதரர் திவாகரனுடன் எடுத்துக் கொண்ட போட்டோ சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

இதுகுறித்து திவாகரனின் மகன் ஜெயானந்த் தனது முகநூல் பக்கத்தில் விளக்கமளித்து உள்ளார். அதில், ‘’படைத்த பிறகு தான் பிரம்மனுக்கே அவர்கள் கொலைகாரர்களாகவும், காமுகனாகவும், மாறுவார்கள் என்று தெரியவருகிறது.

அதனால் பிரம்மன் படைப்பை நிறுத்தியதில்லை. தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளிலும் பல ஆயிரம் உறுப்பினர்கள். அதில் பலர் கொலைகாரர்கள், கொள்ளையன்,  ரேப்பிஸ்ட்,  திருடன் என பலர் உறுப்பினராக சேர்ந்து இருப்பார்கள். 

குற்றம் செய்து பிடிபட்ட பிறகு தான் அவன் தாய், நண்பர்கள் என அனைவருக்கும் தெரியவரும். அப்படி இருக்கையில் அவன் இருந்த அரசியல் கட்சியை மையப்படுத்தி குறை கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படி பார்த்தால் அவன் ஒரு தமிழன். தமிழ் இனத்தை குறை கூற முடியுமா? எதிரி மீது விமர்சனம் செய்யும்போது நமக்கு பொருந்தும் லாஜிக் அவர்களுக்கும் பொருந்தும் என நினைத்தால் விமர்சனங்கள் ஆரோக்கியமடையும்’’ என அவர் தெரிவித்துள்ளார்.