அதிமுகவில் சசிகலா இணைப்பு குறித்து தேவையில்லாமல் பத்திரிகைகள்தான் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர் என வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி கூறியுள்ளார்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டைகள், பேட்டரியில் இயங்கும் நாற்காலிகள், காது கேளாதவர்களுக்கான கருவிகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், தமிழக வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி கலந்து கொண்டு நலதிட்ட உதவிகளை வழங்கினார்.

இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் கே.சி.வீரமணி;- அதிமுகவில் சசிகலா இணைப்பு குறித்து பத்திரிகைகள்தான் குழப்பத்தை உருவாக்குகின்றன. சசிகலாவை எதிர்த்துதான் இந்த ஆட்சியும், கட்சியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அவர்கள் தேவை இல்லாதவர்கள், மக்களால் வெறுக்கப்படக் கூடியவர்கள் என்ற நிலையில்தான் இன்றைக்கு இந்த ஆட்சியும் கட்சியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். அதேபோல், முதல்வர் வேட்பாளர் குறித்து எந்த சர்ச்சையும் இல்லை. சுமுகமாக இருக்கிறது என தெரிவித்துள்ளார்.