சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நலக் குறைவால் உயிரிழந்த நிலையில், கணவரின் இறுதி சடங்கில் கலந்துகொள்வதற்காக சசிகலா, சிறையிலிருந்து 15 நாட்கள் பரோலில் வெளிவந்துள்ளார்.

கடந்த சில மாதங்களாகவே உடல்நலக் குறைவால் நடராஜன் அவதிப்பட்டு வந்தார். கடந்த அக்டோபர் மாதம், அவருக்கு சிறுநீரகம் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, கணவர் நடராஜனை பார்ப்பதற்காக 5 நாட்கள் சசிகலா பரோலில் வந்தார்.

அதன்பின்னர் ஓரளவிற்கு உடல்நலம் தேறிவந்த நடராஜன், கடந்த மூன்று தினங்களுக்கு முன் திடீர் நெஞ்சுவலி காரணமாக சென்னை பெரும்பாக்கத்தில் குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு ஒன்றரை மணிக்கு உயிரிழந்தார்.

நடராஜனின் உடல் அவரது சொந்த ஊரான தஞ்சாவூரில் அடக்கம் செய்யப்பட உள்ளது. கணவரின் இறுதி சடங்கில் கலந்துகொள்வதற்காக சசிகலா 15 நாட்கள் பரோல் கேட்டு சிறை நிர்வாகத்திடம் விண்ணப்பித்தார். அவரது பரோல் மனுவை ஏற்றுக்கொண்ட பரப்பன அக்ரஹார சிறை நிர்வாகம் அவருக்கு பரோல் வழங்கியது. இதையடுத்து சிறையிலிருந்து பரோலில் வெளிவந்த சசிகலா, கணவர் நடராஜனின் இறுதி சடங்கில் கலந்துகொள்வதற்காக தஞ்சாவூர் விரைந்தார்.