Sasikala introduced the Palanisamy
எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்கியதே சசிகலாதான் என்றும் பதவியை தூக்கி எறிந்துவிட்டு மீண்டும் எம்.எல்.ஏ.க்களைக் கொண்டு முதல்வராக பழனிச்சாமி ஆகிவிட முடியுமா என்று டி.டி.வி. தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்செல்வன் காட்டமாக கூறியுள்ளார்.
சசிகலா, டிடிவி தினகரன் தொடர்புடைய வீடுகளில் கடந்த 9 ஆம் தேதி முதல் வருமான வரிசோதனை நடத்தப்பட்டன. 187 இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். ஜெயலலிதாவின் இல்லத்தில் நடத்தப்பட்ட வருமான வரித்துறையின் சோதனைக்கு டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில், தினகரன் ஆதரவாளரான தங்கதமிழ்செல்வன், மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், டிடிவி தினகரன் பற்றி புகார் கூறும் எடப்பாடி பழனிசாமிக்கு தங்கதமிழ்ச்செல்வன் கண்டனம் தெரிவித்தார். போயஸ் கார்டனில் எதற்காக ரெய்டு நடந்தது என்பதும் யாரால் நடைபெற்றது என்பதும் உங்களுக்கு நன்றாகவே தெரியும் என்றார். ஒரு சிலரின் தவறான செயலால் கட்சிக்கு களங்கம் ஏற்பட்டு விட்டதாகவும் அவர் கூறினார்.
எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியது சசிகலா தான் என கூறிய அவர், சசிகலா கூறியதால் தான் எடப்பாடி பழனிசாமிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளித்ததாக கூறினார். சசிகலாவால் பெற்ற பதவியை ராஜினாமா செய்ய தயாரா என தங்கத்தமிழ்செல்வன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் பேசிய அவர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்திற்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் தங்க தமிழ்செல்வன் கூறினார்.
