பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கடந்த நான்கு வருடங்களாக தண்டனையை அனுபவித்து வரும் சசிகலா, இன்னும் நான்கு தினங்களில் விடுதலை ஆக இருந்தார். இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக அவருக்கு சளி, காய்ச்சல் இருந்து வந்ததால் நேற்று முன் தினம் மாலை மூச்சுத் திணறல் ஏற்பட்ட பிறகு அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் . ஆர்.டி மற்றும் பி.சி.ஆர். பரிசோதனையில் அவருக்கு கொரோனா இல்லை என்று தெரியவந்தது. முன்னதாக எடுக்கப்பட்ட ரேபிட் பரிசோதனையிலும் அவருக்கு கொரோனா இல்லை என்று தெரியவந்தது.

சிவாஜி நகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளித்தும் உடல்நிலை மோசமானதால், அங்கு சிடி ஸ்கேன் எடுக்கும் வசதி இல்லாததால் விக்டோரியா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு நடந்த பரிசோதனையில் சசிகலாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார்.
 
சசிகலாவை தொடர்ந்து அவருடன் சிறையில் இருந்த இளவரசிக்கும் இன்று கொரோனா பரிசோதனை நடந்து வருகிறது. இதனால், சிறையில் யார் யாருக்கெல்லாம் கொரோனா இருக்கிறது என்ற அச்சம் எழுதிருக்கிறது.

இந்நிலையில், சிபிஎம் மூத்த தலைவர் அருணன். ''சிறையிலிருக்கும் சசிகலாவுக்கு தீவிர கொரோனா தொற்று! கர்நாடக பாஜக அரசு சிறைகளை பராமரிக்கும் லட்சணம் பாரீர். அங்குள்ள இதர கைதிகளின் நிலை என்ன? அனைவருக்கும் சோதனை செய்யப்பட வேண்டாமா? ஏன் மவுனம் காக்கிறது எடியூரப்பா அரசு?'' என்று வினவி இருக்கிறார்.