சசிகலா உடல்நலம் குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். 

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, தண்டனை காலம் முடிவடைந்து வரும் 27ம் தேதி விடுதலையாக உள்ளார். இந்நிலையில் சசிகலாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை அதிகாரிகள் வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியானது. சிறை வளாகத்தில் முதற்கட்ட பரிசோதனை மேற்கொண்டபோது சசிகலாவுக்கு காய்ச்சல் இருந்தது தெரியவந்தது. 

இதனையடுத்து, அவர் பெங்களூரு சிவாஜி நகரில் உள்ள போரிங் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆம்புலன்ஸில் அழைத்துச்செல்லப்பட்ட அவர், சர்க்கர நாற்காலியில் வைத்து வார்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதையடுத்து சசிகலாவுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், தொற்று இல்லை என்பது உறுதியானது. மூச்சுத் திணறல் இருந்ததாலும் காய்ச்சல் இருப்பதாலும் மருத்துவர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து வரும் நிலையில் சசிகலா அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில், சசிகலா சிகிச்சை பெறும் பெங்களூரு சிவாஜிநகர் அரசு மருத்துவமனைக்கு சென்றார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிடிவி.தினகரன்;- சசிகலா உடல்நலம் குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். சசிகலா ஒருவாரமாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். சசிகலாவுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை. எனினும் ஆக்ஸிஜன் அளவு குறைவாக உள்ளது. ஆக்சிஜன் உதவியுடன் சசிகலாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிடி ஸ்கேன் தேவையா என்பதை மருத்துவர்களே முடிவு செய்வர். சசிகலாவை சந்தித்த பின்னரே முழுமையாக எதையும் கூற முடியும் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.