சசிகலா எப்போதுமே அதிமுகவுக்கு எதிரிதான். எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நன்றாக வழிநடத்துகிறார்கள் என அமைச்சர் கே.சி.வீரமணி பேட்டியளித்துள்ளார். 

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சித்த மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்க நாட்றாம்பள்ளி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 52 படுக்கைகள் கொண்ட சிறப்பு சிகிச்சை மையத்தை அமைச்சர் கே.சி.வீரமணி இன்று திறந்து வைத்தார். அப்போது, பேசிய அவர், ’’திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைவாக உள்ளது. நோய்த் தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கரோனா பரவலைத் தடுக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சித்த மருத்துவ முறைப்படி கரோனாவுக்குச் சிகிச்சை அளிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இங்கு, 26 அறைகளில் 52 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த உணவுகள் வழங்கப்பட உள்ளன. இது மட்டுமின்றி மூச்சுப் பயிற்சி, தியானப் பயிற்சி, 8 வடிவில் அமைக்கப்பட்டுள்ள பாதையில் தினமும் நடைப்பயிற்சி, யோகாசனம், மூலிகை மருத்துவம் ஆகியவை வழங்கப்பட உள்ளன. இதனால் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வாய்ப்புள்ளது. சித்த மருத்துவப் பிரிவில் ஆங்கில மருத்துவமும் பார்க்கப்படும்.

சசிகலா வெளியே வருவது குறித்து அதிகாரபூர்வத் தகவல் வெளியாகவில்லை. இருப்பினும், அவர் வெளியே வந்தாலும் எப்போதுமே அவர் எங்களுக்கு  எதிரிதான். அதில் எந்த மாற்றமும் இல்லை. அதிமுகவை முதல்வரும், துணை முதல்வரும் நல்ல முறையில் வழி நடத்திச்செல்கிறார்கள். அதிமுகவினர் யாரும் சசிகலாவுடன் செல்ல மாட்டார்கள்" என அவர் தெரிவித்தார்.