Sasikala granted parole to visit ailing husband in hospital may arrive in Chennai tomorrow

பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு பரோல் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்று விடுமுறை என்பதால் நாளை தான் பரோல் வழங்கப்படுகிறது. நாளை பரோலில் வெளிவரும் சசிகலா முதலில் சென்னையிலுள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த உள்ளதாகக் கூறப்படுகிறது.

சென்னை தி.நகரில் உள்ள இளவரசியின் மகள் வீட்டில் தான் தங்கப் போவதாக பரோல் கேட்டு விண்ணப்பித்த மனுவில் சசிகலா தெரிவித்துள்ளார். அவரது விண்ணப்பத்தைப் பரிசீலித்த கர்நாடக சிறைத்துறை அதிகாரிகள், அவருக்கு கடும் நிபந்தனையுடன் பரோல் வழங்க முடிவு செய்துள்ளனர். உடல் நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள அவரது கணவர் நடராஜனைத் தவிர வேறு யாரையும் அவர் சந்திக்கக்கூடாது என்று வலியுறுத்தப் பட்டுள்ளது. மேலும், கட்சிப் பிரமுகர்கள், மற்றும் அரசியல் ரீதியான நபர்கள் எவரையும் சசிகலா சந்திக்கக்கூடாது என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு, மருத்துவமனையில் உள்ள தனது கணவர் நடராஜனைப் பார்க்க வேண்டும் என்று கூறி, கர்நாடக சிறைத்துறையில் சசிகலா பரோலுக்கு விண்ணப்பித்திருந்தார். நாளை பரோலில் வெளிவர இருக்கும் சசிகலாவை அழைத்து வர, டி.டி.வி.தினகரன் பெங்களூரு சென்றுள்ளார்.

இதனிடையே, பாதுகாப்பு காரணம் கருதி வெள்ளிக்கிழமை நாளை காலைதான் பரோல் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், இன்றே அவருக்கு பரோல் வழங்கப்பட்டதாக வெளியான செய்திக்கு, இன்னும் பரோல் வழங்கப்படவில்லை என சிறைத் துறை வட்டாரங்களில் தகவல் தெரிவித்துள்ளனர். இதனிடையே கர்நாடக அதிமுக செயலர் புகழேந்தி இது குறித்துக் கூறுகையில், சசிகலாவுக்கு பரோல் இன்னும் வழங்கப்படவில்லை என்றும், பரப்பன அக்ரஹார சிறை எஸ்.பி. சோமசேகர் நாளை (அக்.,6) பரோல் வழங்க கையெழுத்திடுவார் என எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.