sasikala get parole will supporters meet her
சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்துவரும் சசிகலா, 5 நாட்கள் பரோலில் வெளிவந்துள்ளார். இதையடுத்து தமிழக அரசியலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும்? ஸ்லீப்பர் செல்கள் வெளிவருவார்களா? என பல எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.
சென்னை குளோபல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கணவர் நடராஜனைக் காண 15 நாட்கள் பரோல் கேட்டு விண்ணப்பித்திருந்தார் சசிகலா. முதலில் முறையான ஆவணங்கள் இல்லை என பரோல் வழங்க மறுத்த பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை நிர்வாகம், முறையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து சசிகலாவுக்கு பரோல் வழங்கியது.
சசிகலா, 15 நாட்கள் பரோல் கேட்டிருந்த நிலையில், அதை பரிசீலித்த சிறை நிர்வாகம் 5 நாட்கள் மட்டுமே பரோல் வழங்கியுள்ளது. பரோலில் வந்த சசிகலா, பெங்களூருவிலிருந்து விமானத்தில் சென்னை வருகிறார்.
பரோலில் சசிகலா வந்துள்ளதால் முதல்வர் பழனிசாமியும் அவரது ஆதரவு அமைச்சர்களும் கலக்கம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு சசிகலாவை பூஜித்த அமைச்சர்களும் கட்சியின் நிர்வாகிகளு, சசிகலா சிறைக்கு சென்ற பிறகு அவரையும் தினகரனையும் கழற்றிவிட்டனர்.
சசிகலா, தினகரன் ஆகியோரை கட்சி பொறுப்புகளிலிருந்து நீக்கியது, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்தது, தினகரன் ஆதரவாளர்களும் முன்னாள் அமைச்சர்களுமான செந்தில் பாலாஜி வீட்டில் ரெய்டு, பழனியப்பனுக்கு போலீஸ் வலைவீச்சு என தொடர்ச்சியாக தொல்லைகளை கொடுத்துவருகிறது முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு.
ஆனாலும் இதற்கெல்லாம் சற்றும் மனம் தளராத தினகரன், ஆட்சியைக் கலைத்தே தீரவேண்டும் என்பதில் படுதீவிரமாக உள்ளார். கிண்டலாக பேட்டியளிப்பதைத் தவிர முதல்வர் பழனிசாமியின் அதிரடியான நடவடிக்கைகளுக்கு வேறு எந்தவிதமான எதிர்வினைகளையும் தினகரன் ஆற்றவில்லை. தங்களது ஆதரவாளர்கள் பழனிசாமி அணியில் ஸ்லீப்பர் செல்களாக இருப்பதாக மட்டுமே அவ்வப்பொழுது தெரிவித்து வந்துள்ளார்.
எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம், தினகரன் மீது தேசதுரோக வழக்கு என பல இக்கட்டான நேரங்களில் வெளிவராத ஸ்லீப்பர் செல்கள் எப்போதுதான் வெளிவார்கள்? என தினகரனிடம் கேட்டால், ரஜினியின் வசனத்தை சொல்வார்...
எப்போ வருவார்கள்... எப்படி வருவார்கள்..னுலாம் சொல்ல முடியாது. ஆனா தேவையான நேரத்துல கரெக்டா வருவாங்க.. என்பதுதான் தினகரனின் பதிலாக இதுவரை இருந்துள்ளது.
சசிகலா பரோலில் வெளிவந்துள்ள நிலையில், இப்போதாவது ஸ்லீப்பர் செல்கள் வெளிவந்து சசிகலாவை சந்திப்பார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சசிகலா, வெளிவந்தால் தான் சென்று சந்திக்க உள்ளதாக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஓபனாக தெரிவித்துவிட்டார். ஆனால் இன்னும் வேறு எந்தெந்த அமைச்சர்களெல்லாம் சசிகலாவை சந்திப்பார்கள் என தெரியவில்லை. அப்படி சசிகலாவை சந்தித்தால் அந்த ஸ்லீப்பர் செல்கள் யார் என்பது தெரிந்துவிடும்.
நடராஜனின் அறுவை சிகிச்சைக்குத் தேவையான மாற்று உறுப்புகள் கார்த்திக் என்ற இளைஞரிடம் இருந்து எடுக்கப்பட்டது. விபத்தில் சிக்கி தலையில் காயத்துடன் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கார்த்திக்கை சென்னை குளோபலுக்கு அழைத்து வந்து கார்த்திக்கின் உடலுறுப்புகளை பெற்றதன் பின்னணியில் ஒரு அமைச்சர் செயல்பட்டதாக தகவல் வெளியானது. அந்த அமைச்சரும் ஒரு ஸ்லீப்பர் செல்லாக இருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுகிறது.
இவர்கள் இருவரைத் தவிர வேறு யாரெல்லாம் ஸ்லீப்பர் செல்கள் என்பது இந்த 5 நாட்களில் தெரிந்துவிடும். இதற்கிடையே ஸ்லீப்பர் செல்களைக் கண்டுபிடிக்கும் பணியை உளவுத்துறைக்கு வழங்கியுள்ளார் முதல்வர் பழனிசாமி.
நடராஜனைத் தவிர யாரையும் சந்திக்கக்கூடாது என்ற நிபந்தனையின் அடிப்படையில் பரோலில் வந்துள்ள சசிகலா, ஸ்லீப்பர் செல்களை சந்திக்கிறாரா? அரசியல் திருப்பத்திற்கோ ஆட்சி மாற்றத்திற்கோ வித்திடுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..
