சசிகலாவுக்கு பேனர் வைத்த அதிமுக நிர்வாகி கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த நான்கு ஆண்டுகளாக சிறை தண்டனை பெற்று வந்த  சசிகலா பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து விடுதலையானார். கொரோனா தொற்று காரணமாக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரின் சிறை தண்டனை காலம் இன்றுடன் முடிவடைந்ததைத் தொடர்ந்து அவர் விடுதலைசெய்ப்பட்டுள்ளார். 

இந்நிலையில் அடுத்த மாதம் 3ஆம் தேதி அவர் சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி 27ஆம் தேதி விடுதலை செய்யப்படுவார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல் அவருக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையான 10 கோடியே 10 ஆயிரம் ரூபாயை  அவர் ஏற்கனவே செலுத்திவிட்டார். இதனைத் தொடர்ந்து இன்று சிறை அதிகாரிகள் விடுதலைக்கான ஆவணங்களை சசிகலா சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைகான காவல் நிலையத்தில் வழங்கினர். இந்நிலையில் இன்று காலை ஆவணங்களை சரி பார்த்த போலீசார் அவர் விடுதலை செய்யப்பட்டதற்கான ஆவணங்களை சசிகலாவிடம் வழங்கினார். அதை தொடர்ந்து அவர் இன்று விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில் அமமுக தொண்டர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர். 

இந்நிலையில் சசிகலாவின் வருகைக்குப் பின்னர் அரசியலில் மிகப் பெரும் திருப்புமுனை ஏற்பட வாய்ப்புள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கூறிவருகின்றனர். ஆனால் அதை அதிமுக அமைச்சர்கள் மறுத்து வருகின்றனர். அதேபோல் அவர் வந்தாலும் அவர் கட்சிகள் இணைத்துக் கொள்ளப்பட மாட்டார் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் திட்டவட்டமாக கூடியுள்ளனர். இந்நிலையில் சசிகலாவின் விடுதலையை வரவேற்கும் வகையில் அவருக்கு பேனர் வைத்த திருநெல்வேலி மாவட்டம் எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் சுப்ரமணிய ராஜா என்பவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும்  நீக்கி, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர். 

இதுகுறித்து அவர்களது சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த, திருநெல்வேலி மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர்   திரு சுப்ரமணிய ராஜா அவர்கள் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என கேட்டுக் கொள்கிறோம் என அதில் கூறப்பட்டுள்ளது.