அதிமுகவில் சசிகலாவை  இணைக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ள நிலையில் ஓ.பி.எஸ் மற்றும் ஈபிஎஸ் அதிமுக தலைமையகத்தில் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளனர்.

சசிகலாவை அதிமுகவில் இணைக்க வேண்டும் என தேனி மாவட்ட அதிமுக சார்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் காரணமாக பல்வேறு எதிர்ப்பு மற்றும் ஆதரவு குரல்கள் அதிமுகவினரிடம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இரண்டு தரப்பும் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வந்தனர். இரண்டு தரப்பினருக்கும் ஆதரவாக முன்னாள் அமைச்சர்கள் சந்தித்து தங்களது கருத்துகளை தெரிவித்து வந்தனர். இந்தநிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா திருச்செந்தூரில் சசிகலாவை சந்தித்து அதிமுகவில் தலைமையேற்கும் படி கேட்டுக்கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அதிமுக தலைமை ஓ.ராஜாவை கட்சியில் இருந்து நீக்கியது. இந்த சம்பவம் அதிமுக நிர்வாகிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 இந்தநிலையில் மகளிர் தினத்தையொட்டி அதிமுக தலைமையகத்தில் மகளிர் தின நிகழ்ச்சி நடைபெற்றுவருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக மூத்த நிர்வாகிகள் தலைமை கழகத்திற்கு வரவுள்ளனர். இதனால் அதிமுக அலுவலகம் முன்பு விழாக்கோலம் பூண்டுள்ளது. மேளதாளங்கள் முழங்க நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சசிகலா அதிமுகவில் இணைப்பது தொடர்பாக பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து கொள்ள உள்ளனர். அப்போது சசிகலா விவகாரம் தொடர்பாக பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் அதிமுக ஒற்றை தலைமை கோரிக்கையும் அதிமுக நிர்வாகிகள் மத்தியில் எழுந்துள்ளது. இன்று நடைபெறவுள்ள மகளிர் தின நிகழ்ச்சி முடிந்த பின்னர் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த கூட்டத்தில் கடந்த சில நாட்களாக எழுந்துள்ள பிரச்சனைக்கு முடிவு கிடைக்கும் என அதிமுக தொண்டர்கள் எதிர்பார்த்துள்ளனர்.