கடந்த 1991 - 96ம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது, ஏராளமான சொத்துக்கள் சேர்த்ததாக, பாஜக எம்பி சுப்பிரமணிய சுவாமி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என திமுக பொது செயலாளர் க.அன்பழகன், உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதன்படி இவ்வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.

கடந்த 2014ம் ஆண்டு, நீதிபதி குமாரசாமி ராஜா, சொத்து குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 4 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

இதைதொடர்ந்து திமுக சார்பில், இவ்வழக்கை மீண்டும் விசாரிக்க வலியுறுத்தி, உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையில் கடந்த டிசம்பர் 5ம் தேதி ஜெயலலிதா, உடல் நலக்குறைவால் காலமானார்.

பின்னர், இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த பிப்ரவரி 14ம் தேதி வெளியானது. அதில், சொத்து குவிப்பு வழக்கில் தொடர்புடைய 4 பேருக்கு தலா 4 ஆண்டு சிறை தண்டனை வழங்கி உத்தரவிடப்பட்டது. இதை தொடர்ந்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர்  உச்சநீதிமன்றத்தில் சீராய் மனு தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், சொத்து குவிப்பு வழக்கில் தங்களை விடுவிக்க கோரி மேற்கண்ட 3 பேரும், தாக்கல் செய்த சீராய்வு மனு, இன்று மதியம் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படுகிறது.

நீதிபதிகள் ரோஹிண்டன் பாலி நரிமன் மற்றும் அமித்தவ ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு, நீதிபதிகள் அறையில் விசாரிக்க உள்ளனர். நீதிபதிகள் அறையில் விசாரிக்கப்படுவதால், அதுகுறித்த தகவல்கள் வெளியாக வாய்ப்பு இல்லை என தெரிகிறது.

மேலும், சசிகலா உள்பட 3 பேரின் சீராய்வு மனுவை விசாரிக்கும் நீதிபதிகள், அதில் முகாந்திரம் இருந்தால் மட்டுமே, நீதிமன்ற விசாரணைக்கு பரிந்துரை செய்வார்கள் என கூறப்படுகிறது.