சசிகலா, டிடிவி.தினகரனை சேர்ப்பது தொடர்பாக அதிமுகதான் முடிவெடுக்க வேண்டும் என தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி கூறியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள், தொகுதி பங்கீடு குறித்து தீவிரமாக பேசி வருகின்றன. அதிமுக கூட்டணியில் பாஜக உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. இந்நிலையில், இன்றும் இரு கட்சி தலைவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், சென்னை பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி;- அதிமுக பாஜக தொகுதி பங்கீட்டில் இழுபறி இல்லை. அதிமுக உடனான பேச்சுவார்த்தை நல்ல முறையில் சென்றுக்கொண்டிருக்கிறது. எவ்வளவு இடங்கள் என்பது தற்போது பொதுவெளியில் சொல்லமுடியாது. பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்ட உடன் தொகுதிப்பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகும். 

மேலும், சசிகலா, டிடிவி.தினகரனின் பலம், பலவீனம் முதல்வர் பழனிசாமி, துணை முதலவர் பன்னீர்செல்வதிற்கு நன்றாக தெரியும். 2 பேரையும் சேர்ப்பது பற்றி அதிமுகதான் முடிவெடுக்க வேண்டும். நாங்கள் அரசியல் மட்டும் செய்யவில்லை, தமிழகத்தின் வளர்ச்சிக்காக செயல்பட்டு வருகிறோம்.  தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் பாஜகவை வலுப்படுத்தி வருகிறோம் என  சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.