சென்னை மருத்துவமனையில் மரணமடைந்த புதிய பார்வை ஆசிரியர் நடராஜனின் உடல் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரான விளார் கொண்டு செல்லப்பட்டு பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவர் உடல் விளார் வந்து சேர்ந்த அதே நேரத்தில் பெங்களூரு சிறையில் இருந்து சசிகலாவும் வந்து சேர்ந்தார்.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தது கொண்ட நடராஜன் கடந்த 2 மாதங்களாக சென்னை பெசண்ட் நகரில் உள்ள அவர் வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு அவருக்கு திடீரென நெஞ்சவலி ஏற்பட்டதால் பெரும்பாக்கம் குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 1 35 மணிக்கு நடராஜன் மரணமடைந்தார்.

இதையடுத்து  அவரது உடல் சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அஞ்சலிக்குப் பிறகு அவரது உடல் அவரது சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் விளார் கிராமத்திற்கு எடுத்து வரப்பட்டது. அருளானந்தம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு உறவினர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது இறுதிச்சடங்குகள் நாளை நடத்தப்பட்டு மாலை உடல் தகனம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே நடராஜன் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக  பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் 15 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் சிறையில் இருந்து புறப்பட்ட சசிகலா சாலை மார்க்கமாக தஞ்சை சென்று அங்கிருந்து விளார் கிராமம் வந்தடைந்தார். 

அங்கு அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நடராஜனின் உடலைப் பார்த்து சசிகலா கதறி அழுதார்

தொடர்ந்து டி.டி.வி தினகரன்,  பெங்களூரு புகழேந்தி  உள்ளிட்ட அதிமுகவினர் நடராஜனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.