ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் போயஸ் தோட்டம் பகுதியில் உள்ள வேதா இல்லத்தில் வசித்து வந்த சசிகலா ஜெயிலுக்குப் போகும்போது, போயஸ் தோட்டத்தை விட்டு விடக்கூடாது என ஆத்திரத்துடன் கூறிச் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜெயலலிதாவின் தாயார் காலத்தில் கட்டப்பட்டது போயஸ் தோட்ட வேதா நிலைய இல்லம். ஜெயலலிதா பெயரில் இருக்கும் போயஸ் தோட்டம் இல்ல பராமரிப்பை, இது நாள் வரையில் சசிகலா கவனித்து வந்தார்.
அதே நேரத்தில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு போயஸ் தோட்டம் இல்லம் யாருக்கு சொந்தமாகும் என பல விவாதங்கள் நடைபெற்றன. அது குறித்த பெரும் எதிர்பார்ப்புகளும் மக்களிடையே நிலவி வருகிறது.

இதனிடையே ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்குத்தான் போயஸ் தோட்ட இல்லம் சொந்தமாகும் என்ற பேச்சு எழுந்தது. தீபா தனது ஆதரவாளர்களுடன் போயஸ் தோட்டம் இல்லத்தை கைப்பற்றப் போகிறார் என்றெல்லாம் தகவல்கள் வெளியாகின.
இதையடுத்து அளவுக்கு அதிகமான போயஸ் தோட்டத்துக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.அதே நேரத்தில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலாவும் அவரது உறவினர்களும் போயஸ் தோட்ட இல்லத்தை முற்றிலும் ஆக்கிரமித்துக் கொண்டனர்.
ஜெயலலிதாவில் போயஸ் தோட்டத்தில் இருந்து விரட்டி அடிக்கப்பட்ட டி.டி.வி.தினகரன் மற்றும், வெங்கடேஷ் ஆகிய இருவரும், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு தொடர்ந்து அங்கிருந்து தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில்தான் சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா போயஸ் தோட்ட இல்லத்திலிருந்து கட்டாயமாக வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

இதனிடையே அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளர் ஆக்கப்பட்டிருக்கும் டி.டி.வி.தினகரன் தற்போது போயஸ் தோட்டத்தில் தங்கியுள்ளார்.
ஏற்கனவே போயஸ் தோட்ட இல்லத்தை ஜெயலலிதா நினைவிடமாக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன. சசிகலா அதிருப்தி அ.தி.மு.க.,வினர் மூலம் போயஸ் தோட்டத்தை முற்றுகையிடக் கூடும் என அச்சம் இருப்பதால், அதை எதிர்கொள்வது குறித்தும் சசிகலா தரப்பினர் யோசித்து வருகின்றனர்.
அதே நேரத்தில் இது போன்ற எந்தவிதமான சூழலுக்கும் ஆளாகிவிடக்கூடாது என்றும், எக்காரணத்தைக் கொண்டும் போயஸ் தோட்டம் இல்லத்தை விட்டுவிடக் கூடாது எனவும் சசிகலா ஜெயிலுக்குப் போகும் முன்பு சபதம் ஏற்றதாக கூறப்படுகிறது.
