சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை வழங்கப்பட்ட சசிகலா உள்ளிட்ட மூன்று பேரும் இன்று மாலைக்குள் பெங்களூர் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

இந்நிலையில், உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தற்போது சரண் அடைய முடியாது என 4 வாரங்கள் கால அவகாசம் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார் சசிகலா. 

ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக 66.65 கோடி ரூபாய் சொத்து சேர்த்துள்ளதாக பெங்களூரு தனி நீதிமன்றத்தில் சுப்ரமணிய சுவாமி வழக்கு தொடர்ந்தார். 

இதைதொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குன்ஹா ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி உள்ளிட்ட நான்கு பேருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார் . 

மேலும் ஜெயலலிதாவிற்கு 100 கோடி ரூபாய் அபராதமும் மற்ற மூவருக்கும் தலா 10 கோடி ரூபாயும் அபராதமாக விதித்து உத்தரவிட்டார். 

இதையடுத்து ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு தனி நீதிமன்றம் வழங்கிய 4 ஆண்டு சிறை தண்டனை தீர்ப்பை எதிர்த்து அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். 

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி குமாரசாமி ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரையும் விடுவிப்பதாக மூன்றே நிமிடத்தில் தீர்ப்பை வழங்கினார். 

இந்த தீர்ப்பை எதிர்த்து தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் மற்றும் கர்நாடக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. 

நீதிபதீகள் பினாகி சந்திரகோஷ் மற்றும் அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இந்த மனுக்கள் மீதான விசாரணை முடிந்த நிலையில் இறுதி தீர்ப்பு இன்று வெளியானது. 

அதில் நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பை உறுதி செய்யும் வகையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோருக்கு 4 ஆண்டுகள் சிறை மற்றும் தலா 10 கோடி ரூபாய் அபராதம் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

இந்நிலையில் சசிகலா தனக்கு உடல்நிலை சரியில்லை எனவும் , தன்னால் தற்போது நீதிமன்றத்தில் சரண் அடைய முடியாததால் 4 வாரங்கள் கால அவகாசம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.