நேற்று இரவு, சசிகலாவை சந்தித்த தினகரன் “‘நம்ம வீட்ல இழவு விழுந்திருக்கு. இவங்க விழா நடத்திக்கிட்டிருக்காங்க பாத்தீங்களா’ என கோபம் கொந்தளிக்கும் அளவிற்கு பேசியிருக்கிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக சசிகலாவின் கணவர் நடராஜன் மரணமடைந்ததை அடுத்து அவரது உடல் தஞ்சையில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றம் அருகே அடக்கம் செய்யப்பட்டது. போயஸ் கார்டனுக்கு வந்த பிறகு, கணவரை பிரிந்து இருந்த சசிகலா சசிகலா தஞ்சாவூரில் இருக்கும் தனது புகுந்த வீட்டில் முதல் முறையாக தனது கணவரின் மரணத்திற்காக இறுதி அஞ்சலி செலுத்த வந்தார். கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் இருக்கும் சில முக்கிய புள்ளிகள் சசிகலாவை சந்தித்து துக்கம் விசாரித்து வருகின்றனர்.

துக்கம் விசாரிப்பதற்காக வீட்டுக்கு வரும் எல்லோரிடமும் சசிகலாவே உட்கார்ந்து பேசுகிறாராம். நடராஜனுக்கு செய்ய வேண்டிய 9ஆம் நாள் காரியம் வரையிலுமே முடித்துவிட்டு, தலைக்கு எண்ணெய் வைத்து குளித்து, கறிவிருந்து முடித்த பிறகுதான் தஞ்சாவூரில் இருந்து சென்னைக்கு வர திட்டம் போட்டுள்ளாராம் சசிகலா. ஆனால் பரப்பன அக்ரஹாரா சிறையோ தஞ்சையை விட்டு எங்கும் போகக் கூடாது. அதே நேரம் அரசியல் பேசக்கூடாது என நிபந்தனை விதித்துள்ளதால் என்னசெய்வதே குழப்பத்தில் இருகிறாராம் சசிகலா.

இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமி அரசின் ஓராண்டு சாதனைகள் பற்றி இன்று நடக்கும் விழா பற்றி இன்று நாளிதழ்களில் வந்த விளம்பரங்களை சசிகலாவிடம் காட்டியிருக்கிறார் தினா. ‘நம்ம வீட்ல இழவு விழுந்திருக்கு. இவங்க விழா நடத்திக்கிட்டிருக்காங்க பாத்தீங்களா’ என்று கேட்டிருக்கிறார். அப்போது சசிகலாவிடம் பேசிய தினகரன், ‘நான் உங்களை சிறையில சந்திக்கும்போது பொறுமையா போவோம்னு சொன்னீங்க. இப்ப பாருங்க, சித்தப்பா இறந்ததுக்கு இரங்கல் தெரிவிக்காததோட, அது நியாயம்தான்னு ஜெயக்குமாரை விட்டு பேட்டி கொடுக்க வைக்கிறாங்க. இங்க வர்றதா இருந்தவங்களையும், போகக் கூடாதுன்னு மிரட்டியிருக்காங்க. போன வருஷம் நீங்க உண்டாக்கி வச்ச ஆட்சியோட முதலாம் ஆண்டு விழாவை, நாம இப்படி ஒரு துக்கத்துல இருக்கும்போது நடத்துறாங்கன்னா, அவங்கக்கிட்ட இன்னும் என்ன பொறுமையா போறது? முதலாம் ஆண்டு விழான்னா பிப்ரவரியே நடத்தியிருக்கணும்.

இப்ப எதுக்கு திடீர்னு நடத்துறாங்க? நாம துக்கத்துல இருக்கும்போது நீங்க ஏற்படுத்திவச்ச ஆட்சிக்கு விழா கொண்டாடுறாங்கன்னா அவங்களை என்ன பண்றதுன்னு நீங்க சொல்லுங்க... 18 எம்.எல்.ஏ தீர்ப்பு வந்தபிறகு இந்த ஆட்சியை இல்லாமல் ஆக்கிடுறேன்’ என்று வேகமாகக் கூறியிருக்கிறார் தினகரன். எல்லாவற்றையும் சைலன்ட்டாக கேட்டுக்கொண்ட சசிகலா, ‘அவங்க சுய ரூபத்தை இப்பதான் புரிஞ்சுக்கிட்டேன். இந்த ஆட்சி இருக்கக்கூடாது’ என்று உறுதியாகச் சொல்லியிருக்கிறார்.

மேலும், காவிரிக்காக தினகரன் உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்து இருக்கும் நாளைய மறுநாள் 25-ம் தேதி சசிகலா தஞ்சாவூரில்தான் இருக்கிறார். ஆனால், சிறை விதிப்படி அவர் அரசியல் பற்றி எதுவும் பேசக் கூடாது என்பதால் உண்ணாவிரதத்தில் பங்கேற்க முடியாது. ஆனால், சசிகலா தஞ்சாவூரில் இருக்கும் நேரத்தில் தஞ்சாவூரில் உண்ணாவிரதம் என்பதை பக்காவாக நடத்த வேண்டும் என்பது தினகரன் திட்டம். இதற்காக தமிழ்நாடு முழுக்க இருந்து நிர்வாகிகளை உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்க வரவேண்டும் என தினகரன் தரப்பில் இருந்து உத்தரவு போயிருக்கிறது. இது எந்த அளவிற்கு மாஸாக இருக்கணும் என தினா திட்டம் போட்டுள்ளாராம்.