டி.டி.வி. தினகரனை அமைச்சர் ஜெயக்குமாரும், மாஜி அமைச்சர் மணிகண்டனும் கூட இந்தளவுக்கு மனம் நோகடித்திருப்பார்களா? என்று தெரியவில்லை! ஆனால், தினகரனின் நிழலாக வலம் வந்துவிட்டு இன்று அ.தி.மு.க.வில் கரை ஒதுங்கும் புகழேந்தி அந்தக் கிழி கிழிக்கிறார். கூச்ச நாச்சமில்லாமல் தினகரனை போட்டுப் பொளக்கும் புகழின் லேட்டஸ்ட் கிழிப்பு ஒன்றை கவனியுங்கள்....
’நான் மட்டும் இல்லேன்னா தினகரன் கதி என்னாயிருக்கும்?’ என்று கோயமுத்தூரில் வைத்து புகழேந்தி கொளுத்திய வெடி,  ஸ்பை வீடியோ வடிவில் தாறுமாறாக வெடித்து சிதறியது. தன்னை இந்தளவுக்கு பேசிவிட்டாரே?! என்று புகழேந்தியை கட்சியை விட்டு கட்டம் கட்டியிருக்கலாம் தினகரன். ஆனால் இன்று வரை அதை செய்யவில்லை. அதன் பின்னே இருக்கும் மர்மமும் புகழேந்திக்கும், தினகரனுக்கும் மட்டுமே தெரிந்தவை. 


தினகரன்  புகழேந்திக்கு எதிர்ப்பு நடவடிக்கை எடுக்காமல், பம்மியபடியே இருக்க, அவரோ அடுத்தடுத்த நடவடிக்கைகளை செய்து கொண்டே இருக்கிறார். சமீபத்தில் சேலத்தில் முதல்வரை சந்தித்து அடுத்த பட்டாசை பற்ற வைத்தார். இதற்கும் தினகரனிடம் பெரிய ரியாக்ஷன் இல்லை. சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களின் அ.ம.மு.க.வினரை ஆளுங்கட்சிக்குள் புகழேந்தி அள்ளிக் கொண்டு சென்று சேர்க்கவிருக்கிறார்! என்று பேசப்படுகிறது. இது உண்மையா? என்று புகழேந்தியிடம் கேட்டபோது “முதல்வர் எடப்பாடியார் நல்லாவே ஆட்சி பண்ணிட்டு இருக்கிறார். மக்களுக்கு எந்த தொந்தரவும் இல்லாத ஆட்சிதானே நல்லாட்சி. அதைத்தான் அவர் தருகிறார். நாங்க தாய்க்கழகமான அ.தி.மு.க.வுக்கு போயிடுவோமோ?ன்னு பல பேர் கேட்கிறாங்க. அப்படியே போயி இணையுறோமுன்னு வெச்சுக்குங்க. அப்ப தினகரன் அணியில் இருக்கும் எஞ்சியோர், மிஞ்சியோர் எல்லாமே வாரிச்சுருட்டி வந்து சேர்ந்துடுவாங்க. 

நம்ம முதல்வரின் சேலம் மாவட்டத்தில்  அ.ம.மு.க.வில் பலர் அதிருப்தியில் இருப்பது உண்மைதான். அவங்களில் சிலர் என்னை சந்திச்சிருக்காங்க. ஆனால் அது யாருன்னு இப்ப சொல்ல முடியாது. நாங்க இணையுறப்ப எல்லாமே தெரிய வரும். சின்னம்மா இனி தினகரனுக்கு பத்து பைசா கூட தரமாட்டார். இனி அ.ம.மு.க. தேறுவது ரொம்ப ரொம்ப கஷ்டம்தானுங்க.” என்று தாக்கியிருக்கிறார். 
புகழேந்தியின் இந்த பேச்சை கவனித்திருக்கும் அ.ம.மு.க.வினர் “எல்லாம் தெரிஞ்ச புகழேந்தியே சொல்லிட்டாப்ல, பின்ன என்ன. தினகரன் கையில் விளையாடிய காசெல்லாம் சசியோடதுதான். கோடி கோடியா அதை வாங்கித்தான் இவர் தன்னோட வளர்ச்சிக்கும், புகழுக்கும் யூஸ் பண்ணியிருக்கார். 

இப்ப அந்தம்மா நயா பைசா கூட தரலேன்னா கட்சி நடத்தவும், ஸீன் போடவும் தினகரன் என்னதான் பண்ணுவாரு? இனி சிங்கிள் டீக்கே அ.ம.மு.க. சிங்கிதான் அடிக்கணும் போல.” என்று செமத்தியாக கிண்டலடித்துள்ளனர்.