போலீஸ் மூலம் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் அச்சுறுத்தல் இருப்பதாக டி.ஜி.பி அலுவலகத்தில் ஜீவஜோதி புகாரளித்துள்ளார். 

புகாரளித்து விட்டு செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘’சென்னை பணத்தை திருப்பி கொடுக்கும்போது டாக்குமெண்ட் இல்லை எனக் கூறி பிரச்னை செய்கிறார்கள். நாங்கள் புகார் அளித்தும் எங்களுக்கு ஆதரவாக அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. காது கொடுத்துக் கூட எங்கள் புகாரை கேட்கவில்லை. 

மிரட்டலுக்கு உண்டான ஆடியோ, வீடியோ பதிவுகளை போலீஸிடம் கொடுத்திருக்கிறேன். தஞ்சாவூரில் கடந்த 1- ம் தேதி வேதராசு வீட்டில் வைத்து எங்களை மிரட்டினார்கள். எங்களது அக்கா டீச்சராக இருக்கிறார். அவருக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் அவரையும் இந்த எஃப்.ஐ.ஆரில் சேர்த்திருக்கிறார்கள். அவரை கைது செய்வதற்காக போலீஸார் தினமும் காலையில் 5 மணிக்கு அவரது வீட்டிற்கு போய் நிற்கிறார்கள். அதற்கான ஆதராமும் எங்களிடம் இருக்கிறது. இன்ஸ்பெக்டரே அங்கு செல்கிறார். குற்றவாளி வேதராஜையும் கூட்டிக் கொண்டே போகிறார்கள். வேதாரண்யம் போலீஸ் ஸ்டேசன் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் தான் இத்தனையும் செய்கிறார்.

 

இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறோம். ஐஜி பெயரை தவறாக பயன்படுத்தி எங்களுக்கு மிரட்டல் விடுக்கிறார்கள். யாரந்த ஐஜி எனக்கேட்டால் பெயரை சொல்ல மறுக்கிறார்கள். பணத்தை கொடுக்காமல் பத்திரத்தை பறித்து கொண்டு சென்றதாக எங்கள் மீது குற்றம் சாட்டப்படுகிறது. எப்படி பத்திரத்தை திடீரென பறித்துச் செல்ல முடியும்? எனக் கேள்வி எழுப்பினார். 

இந்த ஜீவஜோதி சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலால் பாதிக்கப்பட்டவர். ஜீவஜோதியை அடைய வேண்டும் என்கிற காரணத்தால் அவரது கணவர் சாந்தகுமாரை கொடைக்கானலில் கொலை செய்து விட்டி வந்த வழக்கில் சமீபத்தில் ஆயுள் தண்டனை பெற்றார் ராஜகோபால்.