கலங்கிய நீரை குடித்து ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடும் மக்களுக்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் ஆதரவு தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி சிப்காட்டில் இயங்கிவரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக குமரெட்டியாபுரம் மக்கள் 48 நாட்களாக போராடி வருகின்றனர். ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியேறும் வாயுக்களால் மூச்சுத்திணறல், கண் பார்வை குறைபாடு உள்ளிட்ட பல நோய்களுக்கு ஆளாகியுள்ள குமரெட்டியாபுரம் மக்கள், ஆலையை மூட வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அடுத்த தலைமுறையாவது நோயின்றி ஆரோக்கியமாக வாழ வழிசெய்ய வேண்டும் என்று மன்றாடுகின்றனர். இன்று 48வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். நாளுக்கு நாள் அந்த போராட்டத்திற்கு ஆதரவு பெருகிவருகிறது.

இந்நிலையில், போராட்டக்காரர்களை நேரில் சென்று சந்தித்து தனது ஆதரவை தெரிவித்த சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், போராட்டக்காரகளுக்கு மத்தியில் பேசினார்.

அப்போது, அரசியல் அடையாளம் இல்லாமல் போராட்டத்தில் கலந்துகொள்ள வாருங்கள் எனக் கட்சிகளுக்கு நீங்கள் விதித்த கட்டுப்பாட்டை நான் வரவேற்கிறேன். அதே நேரம் அதிக எண்ணிக்கையில் கைகோத்து போராட்டம் நடத்தினால்தான் அரசுக்கு அழுத்தம் கொடுக்க முடியும். 

இப்போராட்டத்தின் ஒற்றுமையைக் குலைக்க, சீண்டிப்பார்த்து கலவரத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் வருபவர்களை மட்டும் தவிருங்கள். அடுத்த தலைமுறைக்கான உங்களது போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும். ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைப்போல தமிழகம் முழுவதும் இப் போராட்டத்தை விரிவுபடுத்துவோம். இனியாவது இந்த அரசு விழித்துக்கொண்டு இந்த ஆலையை மூட  நடவடிக்கை எடுக்க வேண்டும் என சரத்குமார் பேசினார்.

அப்போது, ஸ்டெர்லைட் ஆலையால் பாதிக்கப்பட்ட நிலத்தடி நீரை பாருங்கள்.. இதைத்தான் நாங்கள் குடிக்கிறோம் என போராட்டக்காரர்கள், நீரை சரத்குமாரிடம் காட்டினர். அதை பார்த்து அதிர்ச்சியடைந்த சரத்குமார், உங்களுடன் நான் இருக்கிறேன் என்பதை உணர்த்தும் விதமாக, அந்த கலங்கிய நீரை வாங்கி குடித்தார். பின்னர், ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் வரை உங்களுடன் நானும் இணைந்து போராடுவேன் என உறுதியும் அளித்தார்.