அதிமுகவில் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வழியில் ஆட்சியைத் தொடர வேண்டும் என்றும் நடிகர் சரத்குமார் தெரிவித்தார்.

அதிமுக இரண்டாக உடைந்தபோது சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். தொடர்ந்து தினகரனின் ஆதரவாளராகவே சரத்குமார் செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில் சரத்குமார் திடீரென முதலமைச்சர் எடப்பாடி  பழனிசாமியை , இன்று காலை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியுடனான  சந்திப்பு மரியாதை நிமித்தமானது மட்டுமே என்றும்  வேறு எந்த காரணமும் இல்லை என்றும் தெரிவித்தார்.

அதிமுகவில் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வழியில் ஆட்சியைத் தொடர வேண்டும் என்றும் தான் விரும்புவதாக சரத்குமார் கூறினார்.

தமிழக மீனவர்கள், இந்திய மீனவர்கள் என்று பார்க்காமல் அனைத்து மீனவர்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

கமலஹாசன் அரசியலுக்கு வருவது குறித்து கருத்து கூற விரும்வில்லை என்றும் அதே நேரத்தில் . யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்றும் அவர் கூறினார்.

 ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து அவர் தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறிய சரத்குமார். அனைவரும் அரசியலுக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்று தான் கூறுவேன் என தெரிவித்தார்.

பெண்களை மரியாதையுடன் நடத்த வேண்டும் என்ற விஜயின் கருத்தை வரவேற்பதாகவும், நடிகர் சங்கத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் சரத்குமார் கூறினார்.

தொடர்ந்து சசிகலா மற்றும் தினகரனின் ஆதரவாளராகவே இருந்து வந்த சரத்குமார் இன்று திடீரென எடப்பாடி பழனிசாமி அணிக்கு தாவியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.