உத்தரப் பிரதேசத்தில் நவீன (ஹை-டெக்) வசதிகளுடன் சமாஜ்வாதி கட்சிக்கு தேர்தல் பிரசார கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

7 கட்ட தேர்தல்

உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் 403 தொகுதிகளில் வரும் 11-ந்தேதி தொடங்கி மார்ச் மாதம் 8-ந்தேதி வரைக்கும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் காங்கிரஸ் - சமாஜ்வாதி கூட்டணி அல்லது பாஜக ஆட்சியை கைப்பற்றும் என இரு வகையான கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் பிரசார கட்டுப்பாட்டு அறைகளை அமைத்து, சமாஜ்வாதி கட்சி தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளது.

ஒருங்கிணைப்பு

இவற்றில் ஒவ்வொன்றிலும் குறைந்தது 8 எல்சிடி டிவிகள் அமைக்கப்பட்டுள்ளன. இணைய தள பிரசார நிபுணர்கள் இரவு பகலாக வேட்பாளர்களின் பிரசார நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து வருகின்றனர். இந்த அறைகள் மூலமாக மாநிலத்தில் உள்ள இளைஞர்களுக்கு சமூக வலைதளங்கள் வழியே பிரசார தகவல்கள் அனுப்பப்படுகின்றன.

அனைத்து வழிகளில்...

இதுகுறித்து, தேர்தல் பிரசார கட்டுப்பாட்டு அறையின் பொறுப்பாளர் ஆசிஷ் யாதவ் கூறுகையில், ‘முதல் அமைச்சர் அகிலேஷ் யாதவ் செய்த நலத்திட்டங்களை மக்கள் மத்தியில் பிரசாரம் ெசய்கிறோம். வேட்பாளர்களின் பிரசாரத்தை ஒருங்கிணைக்கிறோம். மக்களை சந்திக்கவுள்ள அனைத்து வழிகளையும் நாங்கள் கையாண்டு வருகிறோம். சமூக வலைதளம், பத்திரிகை, தொலைக்காட்சி மற்றும் வீட்டுக்கு வீடு சென்று பிரசாரம் உள்ளிட்டவைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தேர்தல் பிரசார அறைகளை நான்காக பிரித்து பணியாற்றி வருகிறோம்’ என்றார்.

இளைஞர்களே இலக்கு

இணையதள தேர்தல் பணிகளை மும்பையை சேர்ந்த அகமது அப்தாப் நக்வி என்பவரிடம் சமாஜ்வாதி கட்சி ஒப்படைத்துள்ளது. நக்வி கூறுகையில், ‘ட்விட்டர், பேஸ்புக், வாட்ஸ்ஆப்பின் வழியே பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறோம். உத்தரப்பிரதேசத்தில் 90 சதவீத இளைஞர்கள் வாட்ஸ்ஆப்பை பயன்படுத்துகின்றனர். அகிலேஷ் யாதவின் குடியரசு தின உரை 22 கோடி மக்களை சென்றடைந்துள்ளது. இளைஞர்களை ஈர்க்கும் வகையில் பிரசார யுக்திகளை அமைத்துள்ளோம்’ என்றார்.